Monday, 17 March 2025

வேலாயுத மாமா என்ற மனிதர்…


நான்
ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் என்று நினைக்கிறேன். என்னுடைய வீட்டுக்கு முன்னால் இருந்த ஓட்டு வீட்டில் எண்பது வயது மதிக்கத்தக்க கிழவர் ஒருவர் எப்போதும் தன்னுடைய சிறிய கருமை நிறத்திலான ட்ரான்ஸ்சிஸ்டரில் எதையோ கேட்டபடியே இருப்பார். ஆல் இண்டியா ரேடியோவில் ஏதாவது வரும்தானே தானே தானானே தானே என்ற ஒரு வரி எனக்கு அடிக்கடி கேட்கும். அந்த வரியை இவர் எப்போது பார்த்தாலும் அலுப்புப் படாமல் கேட்கிறாறே என்று நினைத்துக்கொள்வேன். அவர் வைத்து இருக்கும் டிரான்சிஸ்டர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அது என்னமோ குளிருக்கு பயந்து நடுங்குகிறதோ என்று எண்ணும்படி கனமான ஒரு துணி கொண்டு அதற்கு சட்டை மாதிரி தைத்துப் போட்டு இருப்பார். கம்பி மாதிரி முன்பின் அசையும் ஒரு கோடு தெரியும் சேனல்கள் தெரிகின்ற பட்டையும் பக்கவாட்டில் அதை இயக்கும் சக்கரம் மாதிரியான சாவியும் மட்டுமே வெளியெ தெரியும். மற்ற பாகங்கள் குளிருக்குப் பயந்த மாதிரி உள்ளுக்குள்ளேயே இருக்கும். அந்த டிரான்சிஸ்டர் அவருக்கு வலது பக்கத்திலும் வெற்றிலைப்பெட்டி இடது பக்கத்திலும் இருக்கும். முதுகுக்கு தலையணை இரண்டை வைத்துக்கொண்டு சட்டை எதுவும் அணியாமல் கண்ணை மூடிக்கொண்டு அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். அவர் வேறு உலகில் சஞ்சரிப்பது போலத் தெரியும்.

 அவர்தான் வேலாயுத மாமா.

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவருடன் நான் பேசியதில்லை. அவரும் என்னைக் கண்டுகொண்டதே இல்லை. நான் ஒருவன் இருப்பதும் அவருக்குத் தெரியாது. எப்போதும் முதல் இரண்டு பொத்தான்களை கழற்றிய நிலையில் வெள்ளைச் சட்டையும் மடித்துக் கட்டிய வெள்ளைக் கதர் வேட்டியுடனும் செருப்பில்லாத கால்களுடன் நடந்து வருவார். தோளில் ஒரு துண்டு இருக்கும். அவரை இரண்டு இடங்களில் பார்க்கலாம். ஒன்று அவர் வீடு மற்றொன்று ஊரில் மெயின் ரோட்டுக்குப் பக்கமாக இருந்த பொது நூலகம். படிக்க ஆரம்பித்தால் புத்தகத்திலிருந்து அவர் முகத்தை நீக்கி மற்றவர்களை அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையும் அவருக்கு இருப்பதில்லை. புத்தகம் தவிர வேறு யாருடனும் அவர் பேசி நான் பார்த்ததில்லை. மிகவும் குறைவாகப் பேசுவார். அவர் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் ஏதோ திட்டி மறப்பாடு என்று என்னுடைய அம்மா சொல்லியிருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. திட்டி மறப்பாடு என்பது ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தோடு எதற்காகவோ சல்லிப்பிரச்சினையின் காரணமாக சண்டையிட்டுக் கொண்டு குல தெய்வங்களை சாட்சியாகக் கூப்பிட்டு இனிமேல் எந்தக் காலத்திலும் பேசிக்கொள்ளவோ முகத்தில் கூட விழிக்கவோ மாட்டோம் என்ற ஓர் ஒப்புதலுக்கு வருவது. அப்படி மறுபடியும் பேசிக்கொள்ள வேண்டுமென்றால் சாட்சியாக இருந்த அந்தத் தெய்வங்களின் முன்னிலையில் அனுமதி பெற்ற பின்னரே பேசிக்கொள்ள முடியும். பிறகு இரண்டு குடும்பங்களும் துண்ணூறு (திருநீறு) பூசிக்கொள்வார்கள். அப்படி என்னதான் சண்டையாம்?

ஒரு நாள் மகமு அத்தை அவித்த நெல்லை வீட்டு முற்றத்தில் காயப்போட்டுக் கொண்டிருந்தபோது நான் மணலில் விளையாடிக்கொண்டிருந்தேனாம். அதாவது எனக்கு அப்போது மூன்று வயதாம். அம்மா சொன்னதுதான். காற்றில் பறந்த மணல் மகமு அத்தையின் முகத்தில் பட்டுவிட்டதாம். உடனே சண்டைக்கு வந்துவிட்டதாம். அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மகமு அத்தை கேட்கவில்லையாம். நான் வேண்டுமென்றே யாரோ ஒருவரின் தூண்டுதலால் அப்படிச் செய்தேனாம்! என் வீட்டின் மேல் மண்ணை அள்ளி இறைத்து திட்டியது. மகமு அத்தைக்கு அடிக்கடி மண்னை அள்ளித் தூவும். பார்க்க சுவாரஸியமாக இருக்கும். என் குடும்பம் விளங்காமல் போக என்ன வசவெல்லாம் இருக்கிறதோ அத்தனை வசவுகளையும் அள்ளி வீசியது. கை விரல்களை நெட்டி முறித்தது. அப்படிப்பட்ட அந்த மகமு அத்தையின் கணவர்தான் இந்த வேலாயுத மாமா. இவருக்கு எப்படி இந்த மாதிரி மனைவி அமைந்தது என்ற குழப்பம் எனக்கு இருந்து கொண்டே இருக்கும். அது என்ன மகமு! வித்தியாசமான பெயராக எனக்கு அப்போது அது தோன்றியது. பிறகுதான் தெரிந்தது அது மகமாயி என்ற பெயரின் சுருக்கம் என்பது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எங்களுக்கு உறவினர்கள்தான். ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியாது. 

என்னிடம் இரும்புச் சக்கர வண்டி ஒன்று இருந்தது. வண்டி என்றால் மனிதர்களை சுமந்து செல்லும் வண்டி அல்ல. நான் ஓட்டி விளையாடுவதற்கு நானாகத் தயார் செய்து கொண்ட வண்டி. நெல் அவிக்கும் அண்டாவின் வாய்ப்பகுதியில் இருக்கும் ஒரு பெரிய வளையத்தை எடுத்து, கொக்கி போல் வளைக்கப்பட்ட ஒரு சிறு கம்பியின் ஊடே அந்த வளையத்தை ஒரு குறிப்பிட்ட விசையில் தள்ளிக்கொண்டு போனால் உய்ங்...ங் என்ற சத்தத்துடன் அது உருண்டு செல்லும். அதை லாவகமாகச் செலுத்த பயிற்சி வேண்டும். இல்லையென்றால் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அதை மணலில் ஓட்டி செல்வதற்கும் ஒரு லாவகம் வேண்டும். அந்த வயதில் அது என்னுடைய அடையாளமாக இருந்தது. அந்தச் சத்தம் எங்காவது கேட்டால் நான் அக்கம் பக்கத்தில்தான் இருக்கிறேன் என்பதை கண்டு கொள்ளலாம். எதையுமே கண்டு கொள்ளாதவராக இருந்த வேலாயுத மாமாவை அந்த வண்டியின் சத்தம் அசைத்தது. அந்த சத்தம் அவருக்கு எப்படியிருந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் நான் அப்படி அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற போது அவராகவே என்னைக் கூப்பிட்டார். “ யாரப்பா அது?’’ 

என்னடா இது இது நாள் வரை பேசாத வேலாயுத மாமா திடீரென்று பேசுகின்றாரே என்று எனக்கு குழப்பமாக இருந்தது. திட்டி மறப்பாடு உள்ள குடும்பமாயிற்றே என்று வாசலில் உட்கார்ந்திருந்த என்னுடைய அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். திட்டிமறப்பாடு குறித்த எந்த ஒரு விசனமும் அம்மாவின் முகத்தில் இல்லை என்பது தெரிந்தது. 

நாந்தான் சரவணன்என்றேன் நான். 

எந்த சரவணன்? என்று திரும்பக் கேட்டார் மாமா. 

என்ன சொல்வது?’ “அதான்...கார்மேகம் இருக்காருல்லஅவர் மவன் சரவணன். உங்க வீட்டுக்கு எதுக்கே இருக்கோமில்ல அந்த வீடுஎன்று கொஞ்சம் சத்தம் போட்டுச் சொன்னேன். கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். எங்கள் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்த சம்பாஷணையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் என்னுடைய அம்மாவும் எங்கோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பக்கத்தில் அழைத்தார். அவருக்கு கண்கள் சரியாகத் தெரியவில்லை போலும். “ உம்பேர் சரவணாவா? என்ன படிப்பு படிக்கிறே? என்று என்னுடைய தலையை வருடியவாறே கேட்டார். “ 

அஞ்சாப்பு படிக்கிறேன் 

நல்லா படிப்பியா?” 

ம்ம் 

இது என்ன வண்டி? உனக்கு யார் தந்தா? 

யாரும் தரல...நானாத்தான் செஞ்சேன் 

எப்புடி 

பழைய அண்டா ஒண்ணு இருந்துச்சா...அதிலே இருந்து எடுத்தேன். இந்தக் கம்பியை அம்மா வளச்சுக் குடுத்துச்சு 

யாரு அலகா?” (அழகம்மாள் என்பது என் அம்மாவின் பெயர்) 

ம்ம்ம்..ஆமா 

அது சரி...நீ இங்கதான் இருக்கேன்னு ஏன் இது வரைக்கும் எங்கிட்டெ சொல்லல?” 

நீங்க யாருன்னு எனக்கு தெரியாதுநீங்களும் இதுவரை பேசினது இல்லையா? நீங்க சண்டக் கார வீடுன்னு அம்மா சொல்லியிருக்கு. மகமு அத்தை சண்டை போடுவாங்களாம் 

எப்ப சண்டை போட்டாங்களாம்? எதுக்காம்? 

ஒரு நா மண்ணுல விளையாடிட்டு இருந்தேனா...திடீர்னு மகமு அத்தை அம்மா கூட சண்டை போட்டுச்சு. அதுக்கு அப்புறம் யாரும் பேசுறதில்லை 

யாரு அந்தக் கிறுக்கியா? அவளுக்கு தெருச்சண்டைண்ணா ரொம்பப் பிடிக்குமே. அவ யார்கிட்டேதான் சண்டை போடாம இருக்கா? என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மகமு அத்தை கையில் சாணியுடன் அங்கே வந்துவிட்டது. என்னை ஒரு முறை உற்றுப் பார்த்தது. “ ஏன்...கெழடு தட்டினதுக்கு அப்புறம் எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருக்க முடியலையோஎன்று சத்தம் போட்டு கிண்டலாகக் கேட்டது. வேலாயுத மாமா அதற்கு பதில் சொல்லவில்லை. 

அவ கிடக்குறா கிறுக்கு முண்டை. நீ நல்லா படிக்கணும். சரியா?”  என்று என்னைப் பார்த்து சொன்னார். 

ம்ம்ம். நல்லாப் படிக்கிறேன். சரி நான் வர்றேன்.” – அங்காள ஈஸ்வரி கோயில் முற்றத்தில் பம்பரம் விளையாடும் கூட்டமும் கோலி விளையாடும் கூட்டமும் என்னை பிடித்து இழுத்தன. 

அதன் பிறகு வேலாயுத மாமா என்னுடைய பால்ய பருவத்தின் அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான அங்கமாக மாறினார். அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் அவரைப் பார்க்கப் போய்விடுவேன். அவர் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சொல்லிக் கொடுத்த விதம் என்னுடைய நெஞ்சில் இன்றும் நீங்காமல் நின்று கொண்டிருக்கிறது. நான் ஆறாம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே இந்த இரண்டிலும் வருகின்ற ஏறக்குறைய எல்லாக் கதாப்பாத்திரங்களையும் பற்றிய அறிதல் வந்திருந்தது. இந்தக் கதைகளில் வருகின்ற உடல் சம்பந்தப்பட்ட சேர்க்கைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அதிக பட்சமான நாகரீக வார்த்தைகளை உபயோகிப்பார். உதாரணத்திற்கு முனிவர் ஒருவர் தன்னுடைய பத்தினியுடன் மான் வடிவம் எடுத்து உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது பாண்டு தவறுதலாக அம்பெய்தி அவரைக் கொல்ல நேர்ந்ததைச் சொல்ல வரும்போதுஅவர்கள் போகம் செய்து கொண்டிருந்த போதுஎன்பார். “ போகம் என்றால் என்ன மாமா?” என்று கேட்டால்அது கூடிக் குலவிக்கொண்டிருப்பதுஎன்பார். இன்னொரு சந்தர்ப்பத்தில் சத்தியவதி பிறந்த முறையைச் சொல்ல வரும்போதுவிந்துஎன்ற வார்த்தையை அவர் உபயோகப் படுத்தியதே இல்லை. “மன்னன் ஒருவன் வேட்டைக்குச் செல்லும் போது அவனுக்கு அவனுடைய மனைவியின் ஞாபகம் வந்து விட்டது. தவிர்க்க முடியாமல் அவனுடைய ஆகர்ஷ்ணம் விந்துவாக வெளியாகிவிட்டது என்று சொல்ல வரும்போதுஅவனுடைய இந்திரியம் கழன்று விட்டதுஎன்று சொல்வார். அதை ஒரு இலையில் பத்திரமாக மடித்து தன்னுடைய புறாவிடம் கொடுத்து ராணியிடம் சேர்ப்பிக்கும்படி சொல்லிக் கொடுத்தது, அதனை வழியிலேயே ஒரு வல்லூறு மறித்து இலையைக் கிழித்தது, நடந்த சண்டையில் நழுவி ஆற்றின் மேல் விழுந்த விந்தை மீன் ஒன்று கவ்வியதால் அது கர்ப்பமானது என்று எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லும்போது, தான் ஒரு பத்து வயது சிறுவன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற ஒரு சுயபுத்தி தந்த செம்மையான சொற்செறிவுடன்தான் அவர் பேசுவார். அவர் என்னிடம் கதை சொல்லும் போது அது கோர்வையாக இருக்காது. துண்டு துண்டாக சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளின் நிரலாகவே அது இருக்கும். ஆனால் எதுவும் தவறிவிட்டதாக எனக்கு நினைவு இல்லை. அவர் சொல்லித் தந்த பின்புதான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணமும் மஹாபாரதமும் பார்க்கப் பிடித்தன. 

அவருடை உடல் ஒரு வித்தியாசமான வடிவம் கொண்டிருந்தது- பிடித்து இழுக்கும்படி தொங்கிப்போன மார்பு, முற்றிலும் நரைத்துப்போயிருந்தாலும் முடியுடன் இருந்த தலை, உடலெங்கும் பூசியிருந்த திரு நீறு, சில சாவிகளுடன் இருந்த பூணூல், சவ்வாது மணக்கும் அவருடைய கைத்துண்டு. அவர் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் ஏதோ ஒரு பூஜையறைக்குள் இருக்கும் எண்ணம் ஏற்படும். ஒரு மாதிரியான ஜவ்வாதும் மஞ்சளும் கலந்த நறுமணம் அவரிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும். 

வேலாயுத மாமா என்னிடம் ஒன்றை அடிக்கடி வாங்கி வரச் சொல்வார். அது தூக்க மாத்திரை.   சரவணா...தூக்கமே வர மாட்டேங்குது...நீ போய் காஜா கடையில் ஒரு தூக்க மாத்திரை வாங்கி வா என்று சொல்வார். காஜா என்பவர் ஊரின் உள்ளே ஒரு பலசரக்கு கடை வைத்து இருந்தார். அதில் எல்லாமே இருக்கும். பல் வலிக்கும் மருந்து இருக்கும்! வயலில் அடிக்க பூச்சி மருந்தும் இருக்கும். அவ்வப்போது வருகின்ற நோய் நொடிகளுக்கென்று சில மருந்துகளையும் அவர் வைத்து இருப்பார். அது மருந்துக் கடையோ பல சரக்கு கடையோ உரக்கடையோ அவருடைய கடையை எப்படி அழைத்தாலும் பொருந்தும். அங்கு சென்று நான் தூக்க மாத்திரை கேட்கும் போதெல்லாம் அது யாருக்கு என்று மட்டும் காஜா கேட்பார். நான் சொல்வேன். உடனே சாப்பிட்டு விடும்படி சொல்வார். சேர்த்து வைக்கக் கூடாது என்ன சரியா என்று சொல்லிக்கொண்டே எனக்கு அதைத் தருவார். நான் அதைக்கொண்டுவந்து வேலாயுத மாமாவிடம் கொடுப்பேன். இந்த மாதிரி நான் அவருக்கு அவ்வப்போது கடந்த ஒரு வருடத்தில் இருபது தடவைக்கும் மேலாக வாங்கி தந்திருப்பேன். தூக்க மாத்திரைகளுக்கு இடையில் அவர் எனக்குக் கதை சொல்வது மட்டும் நிற்கவில்லை. 

ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்த என்னை ஒருவன் மூச்சிறைக்க வந்து கூப்பிட்டான். “ டேய் சரவணா உன்ன எல்லோரும் அங்கே தேடுறாங்கடா...சீக்கிரம் போ 

எங்கடா 

ஒவ் வீட்டிலதான்.” 

என்னை எதற்கு தேவையில்லாத நேரத்தில் தேடுகிறார்கள் என்று எண்ணியபடி வீட்டை நோக்கி என்னுடைய வண்டியைச் செலுத்தினேன். உய்ங் சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தது. என் வீட்டில் யாரும் இல்லை. நான்கு ஐந்து பேர் வேலாயுத மாமா வீட்டில் குழுமியிருந்தார்கள். “வந்துட்டியாடா...உன்னத்தான் மாமா கேக்குறாரு...போ உள்ளேஎன்ற என் அம்மாவின் குரல் கேட்டது. “வாடா இங்கே...என்று என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு என்னுடைய அண்ணன் வேலாயுத மாமாவிடம் கொண்டு சென்றார்.                      மாமா...இந்தா சரவணா வந்து விட்டான். கண்ணைத் தொறங்க 

வேலாயுத மாமா லேசாக கண்ணைத் திறந்தார். ஏதோ ஆழமான தூக்கத்தில் இருப்பவரைப் போல தனது வலது கையை அசைத்து என்னை பக்கத்தில் அழைத்தார். எனக்குப் புரிந்து விட்டது. நான் கொடுத்த இருபதுக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை எல்லாம் ஒரு சேர விழுங்கியிருக்கிறார். “சரவணா...எனக்கு வாழ்ந்தது போதும் போலிருக்குது சரவணா...நீ என்ன விட்டுப்புட்டு எங்கே போய்ட்ட?” என்று என்னுடைய தலையை வருடிக்கொண்டே முனகலாகப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பத்து வயது சிறுவனிடம் அவர் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தார். மரணத்தின் வாசலில் நின்று கொண்டு தான் கடந்து வந்த வாழ்க்கையின் அர்த்தமின்மையை வாழ்க்கை என்றாலே என்னவென்று தெரியாத சிறுவன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர் மூச்சு நின்று விட்டது. பெரிய அண்ணன் அவருடைய மூக்குக்கு முன்னால் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அவர் மரணித்துவிட்டதை உறுதி செய்தார். எனக்கு அழத்தோன்ற வில்லை. ஆனால் பெரும் துக்கமாக இருந்தது. வேலாயுத மாமா இறந்து போக நான் தான் காரணம் என்ற உண்மை மட்டும் எனக்கு மிகவும் வலியைத் தந்தது.    

இவருக்கு எப்படி இத்தனை தூக்க மாத்திரை கிடைத்தது?? இந்தக் கேள்வி எல்லோரையும் குடைந்தது. யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லை. என் அம்மாவுக்கு மட்டும் தெரியும். அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு அவரைப் பற்றி ஏதோ பேச்சு வரும்போது                                   நீந்தானடா கண்ணு அவருக்கு இந்த மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தேஎன்று ஒருநாள் என்னிடம் அம்மா சொன்னபோது அது நாள் வரை அழாமல் தேக்கி வைத்திருந்த கண்ணீர் அப்போதுதான் உடைந்து வெளியேறியது 

முகநூலில் அடிக்கடி இறப்பு செய்திகளைப் படிக்கிறேன். ஏனோ அவருடைய நினைவு வந்துவிட்டுப் போகிறது. வயோதிகத்தால் அவர் என்றோ இறந்து போயிருக்கலாம். இருந்தும் அவருடைய இறப்பை துரிதப்படுத்திய குற்ற உணர்வு இன்றும் இருந்து கொண்டுதானிருக்கிறது. I miss him.

 

--சரவணன் கார்மேகம்.