Friday, 24 March 2023

நாம் யாரென்று நமக்குத் தெரியாது (We Never Know) by Yusuf Komunyakaa

ஒரு நொடித்துளி நேரம்தான்.

நெடிதுயர்ந்த புல்லின் பின்னால்

காதலியைக் கட்டியணைக்கும்

கண நேர மயக்கம் போல்தான் இருந்தது

அவன் காட்டிய ஒற்றை அசைவு.

 

காத்திருந்த ரவைகளை

கண்ணிமைக்கும் நேரத்தில்

காறி உமிழ்ந்தன எங்கள்

கையில் இருந்த துப்பாக்கிகள்.

அவன் வீழ்ந்த இடம்

போகும் முன்பே

தேடிய தேகம் கிடைத்த மகிழ்ச்சியில்

அவனைப் பாதியாக்கி இருந்தன

அவனைச் சுற்றி

மொய்த்த ஈக்கள்.

 

வீழ்ந்த நேரத்திலும்

அவன் விரலிடுக்கை

விட்டுவிடாமல் ஒட்டிக்கொண்டிருந்தது  

புகைப்படம் ஒன்று.

அதைப் பார்த்த தருணத்தில்

அன்பெனும் கடலில் அமிழ்ந்தெழுந்தேன்

என்பதைத் தவிர

வேறு எதையும்

எனக்கு சொல்லத் தெரியவில்லை.

 

தூரத்தில் வெடித்த

பீரங்கியின் சத்தத்தையும்

எங்கோ உறுமிக்கொண்டு

உயரே எழும்பிய

விமானங்களின் சத்தத்தையும் தவிர 

அதிகாலையின் வெளிச்சம்

எனக்கு அழகாகவேதான் தெரிந்தது.

உருவிய படத்தை

அவனிடமே தந்தேன்.

குப்புறக் கிடந்தவனை

வான் பார்க்க புரட்டிப் போட்டேன்.

இனிமேல்

அவன் இந்த பாழ் நிலத்தை

முத்தமிட வேண்டிய

அவசியம் இல்லை.

__________________

Source: Yusuf Komunyakaa’s “We Never Know”

Translated into Tamil by Saravanan. K