ATTENTION READERS: English translation of Pa. Singaram's epic novel புயலிலே ஒரு தோணி- 'A Boat in the Storm' is available in this blog.

Tuesday 1 October 2024

வெட்கத்தால் முகம் சிவக்கும் காதலிக்கு...

Source : Andrew Marvell’s famous poem “To His Coy Mistress” 

(This poem was written nearly four hundred years ago)  

In Tamil : Saravanan Karmegam

 

என்னவளே! 

உன்னுடைய இந்த வெட்கம் ஒரு குற்றம் அல்ல.

நமக்கு மட்டுமல்ல

இந்த உலகிற்கும் போதுமான நேரம் இருந்திருந்தால்...

உன்னுடைய இந்த வெட்கம் ஒரு குற்றம் அல்ல.

 

நமக்கு நேரமிருந்தால் 

வேலையற்றுப் போய் வெறுமனே உட்கார்ந்து கொண்டு

எப்படி எங்கே நடை பழகலாம்;

காதல் பொங்கி வழியும் இந்த நாளை 

எங்கு சென்று கழிக்கலாம் என்று திட்டம் தீட்ட முடியும்.  

 

மாணிக்கப் பரல்கள் பரவிக்கிடக்கும் இந்தியாவின் கங்கைக் கரையில்

காலார அமர்ந்து காலை வரை யோசிக்க முடியும். 

இல்லையென்றால்

ஹம்பர் நதியின் தீரத்தில் நேரம் போகாமல் புலம்பித் தீர்க்க முடியும்.

 

வெள்ளம் வருவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே 

உன்னை நான் காதலிக்க திட்டமிட முடியும்.

நீயும் யூதர்கள் எல்லோரும் மதம் 

மாறும் தினம் வரை என் காதலை மறுத்துக் கொண்டு 

பிடிவாதம் பிடிக்க முடியும். 

 

இன்று இலைகளையும் தழைகளையும் போல் இருக்கும் என் காதல் 

மெதுவாக வளர்ந்தாலும் வல்லரசுகளை விட வலிமையாக வளர முடியும்.

 

உன் காந்தக் கண்களைப் பற்றி பேச ஒரு நூறு வருடம். 

பிறை நெற்றிக்கு இன்னொரு நூறு வருடம். 

தனமுலை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இருநூறு வருடம். 

சொல்ல மறந்த மீதிகளுக்கு முப்பதாயிரம் வருடம். 

அவயம் ஒன்றுக்கு ஒரு யுகம். 

இதயம் என்ற அவயத்துக்கு இறுதியாக வருகின்ற யுகம். 

 

அன்பே!

இப்படியெல்லாம் காதல் மொழி பேசி காலத்துக்கும் காதலிக்க 

தகுதியான காதலிதான் நீ. 

காலம் மட்டும் இருந்தால் சுருதி குறையாமல் காதல் செய்யும்

காதலன்தான் நானும். 

 

ஆனால்...

கொஞ்சம் கூர்ந்து கவனி. 

இறக்கை முளைத்த காலத்தின் ரதமொன்று 

வேகமாக நம்மை நோக்கி வரும் சத்தம் நமக்குப் பின்னால் கேட்கிறது. 

 

அங்கே பார்...

 

எல்லையில்லா நித்தியத்தின் பாலைப் பெருவெளி 

நமக்கு முன்னால் நீண்டு கிடப்பதைப் பார். 

அங்கே உன்னுடைய அழகைப் பற்றி

கேட்பார் எவருமில்லை. 

பளபளக்கும் உனது பளிங்கு மாளிகையைக்

கண்டு மயங்குவார் யாருமில்லை. 

என் பாடலின் எதிரொலியை ரசிப்பார் யாருமில்லை. 

பூட்டி பூட்டிப் பாதுகாத்த உன் கற்பை புணர்ந்து மகிழ 

புழுக்களைத் தவிர வேறு எதுவும்  வரப்போவதில்லை. 

 

செருக்கும் கர்வமும் பொருக்குத்தட்டி மண்ணில் மறையும். 

காமம் கரைந்து சாம்பலாகப் பறக்கும். 

நமக்குத் தேவையான தனிமையைக் கல்லறை தரும். 

மாற்றுக் கருத்தில்லை.  

ஆனால்

கல்லறையில் எவரும் ஆலிங்கணம் செய்து கொள்வதில்லை.

 

என் அன்புக்குரியவளே!

அதனால்தான் சொல்கிறேன். 

இளமையின் வண்ணம் இளங்காலையின் பனிபோல் 

உன் தோலில் ஒட்டிக் கொண்டிருக்கும்போதே...

 

உன்னுள் எரிந்து கொண்டிருக்கும்ஆசைத்தீயை 

உடலில் ஒவ்வொரு துளையின் வழியே 

கடத்திவிட உன் ஆன்மா துடிக்கும் போதே... 

காலத்தின் கருணையற்ற கரங்கள் 

நம் கழுத்தை இறுக்கும் முன்பே...

அதன் இறுக்கத்தில் நாம் மெதுவாக மரணிப்பதற்கு முன்பே...

ஒன்றில் இருந்து இன்னொன்று காமம் குடிக்கத் துடிக்கும் பறவைகளாய்

நம்முடைய விளையாட்டை  விளையாடி முடிப்போம்.

 

நம்முடைய சக்தி அனைத்தையும் மீதம் இருக்கும் இனிய நேரத்தையும்

ஒற்றைப் பந்தாகச் சுருட்டிக்கொள்வோம்.  

வாழ்க்கையின் இரும்புக்கதவுகளை வலிந்து உடைப்போம். 

உடைந்த கதவுகளின் வழியே நம் இன்பங்களின் 

எல்லைகளைக் கிழித்தெறிவோம். 

 

சுற்றுகின்ற சூரியனை நிறுத்தி வைக்க முடியாது.   

அதனால் என்ன

அதை நமக்காக ஓட வைப்போம். 

.................