Thursday, 13 April 2023

இன்றிரவு நான் மிகவும் சோகமான வரிகளை எழுதுகிறேன். by Pablo Neruda

இன்றிரவு

என் வாழ்வின் மிகவும் சோகமான 

வரிகளை என்னால் எழுத முடிகிறது. 

 

உதாரணத்திற்கு இந்த வரிகள்: 

இந்த இரவு இன்றோடு சிதைந்து போய்விட்டது

நீல வண்ணத்தில் ஒளிரும் 

நட்சத்திரங்கள் தொலைவில் நின்று

நடுங்கிக் கொண்டிருக்கின்றன. 

இரவின் காற்று வானில் சுழன்றடித்து 

எங்கோ பாடிக்கொண்டிருக்கிறது’ 

 

இன்றிரவு

என் வாழ்வின் மிகவும் சோகமான 

வரிகளை என்னால் எழுத முடிகிறது. 

நான் அவளை மிகவும் காதலித்தேன். 

அவ்வப்போது அவளும்

என்னைக் காதலித்துதான் இருக்கிறாள். 

இந்த மாதிரியான நீண்டதொரு இரவில்

அவளை என்னுடைய கரங்களில் 

ஆதரவாக தாங்கியிருக்கிறேன். 

முடிவில்லா இந்த வானப்பரப்பின் கீழ்

அவளை நான் திரும்பத் திரும்ப 

முத்தமிட்டுத் திளைத்திருக்கிறேன். 

 

சிலசமயம் அவளும் என்னைக் 

காதலித்திருக்கிறாள். 

நானும் காதலித்திருக்கிறேன். 

அசைய மறுக்கும் அவளது 

பெரிய கண்களை 

என்னால் எப்படி காதலிக்காமல் 

இருந்திருக்க முடியும்

 

இன்றிரவு

என் வாழ்வின் மிகவும் சோகமான 

வரிகளை என்னால் எழுத முடிகிறது. 

அவள் இன்று என்னிடம் இல்லை 

என்பதை நினைத்துப் பார்ப்பதற்காக…

அவளை இழந்து விட்டேன் 

என்பதை நான் உணர்ந்துகொள்வதற்காக…

அடர்ந்து நிற்கும் இந்த இரவின் 

கனத்தை நான் கேட்டு நிற்பதற்காக…

அவளில்லாமல் என்னைத் தாக்கும் 

பொருண்மையை எதிர்கொள்வதற்காக….

 

இன்றிரவு மிகவும் சோகமான 

வரிகளை எழுதுகிறேன். 

இந்தக் கவிதையும் கூட

புல்வெளியின் மீது விழும் பனித்துளியாய் 

என் ஆன்மாவுக்குள் சென்று 

தஞ்சமாகிவிட்டது. 

 

எல்லாம் முடிந்து விட்டது. 

எங்கோ தொலைவில் யாரோ 

பாடுவதைக் கேட்க முடிகிறது. 

அவளை இழந்த என் ஆன்மாவும் 

அமைதியிழந்து தொலைவில் 

அலைந்து கொண்டிருக்கிறது. 

அவள் எங்கோ எனக்காகக் 

காத்திருக்கிறாள் என்பதைப்போல 

என் கண்கள் அவளைத் தேடிக் களைக்கின்றன. 

என் இதயம் அவளைத் தேடுகிறது. 

ஆனால் அவள் இப்போது என்னிடம் இல்லை. 

இதே இரவுதான் 

இங்கிருக்கும் இதே மரங்களை 

வெண்ணிறத்தில் வண்ணமடிக்கிறது. 

நாங்கள் மட்டும்தான் 

முன்பிருந்ததைப் போல இங்கில்லை. 

 

நான் இப்போதெல்லாம் 

அவளைக் காதலிப்பதில்லை. 

அது நிச்சயம். 

ஆனால் நான் அவளைக் காதலித்திருக்கிறேன்.

அவளுடைய பேசிய குரல் 

மிதக்கும் காற்றினைத் தொட்டுப்பார்க்க 

என்னுடைய குரல் 

இன்றும் முயன்று கொண்டிருக்கிறது. 

 

அவள் இன்னேரம் இன்னொருவரின் 

மனைவியாகி இருப்பாள். 

என்னுடைய முன்னாள் முத்தங்களைப் போல. 

அவள் இல்லாத வெறுமை

செழுமையான அவள் உடல்

ஆழம் காண முடியாத அவள் கண்கள்;  

நான் இப்போதெல்லாம் 

அவளைக் காதலிப்பதில்லை. 

அது நிச்சயம். 

ஒருவேளை அவளை நான் 

காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேனோ! 

 

காதல் என்னவோ குறுகிய காலம்தான். 

மறப்பதுதான் நீண்டு நெடியதாக இருக்கிறது. 

ஏனென்றால் 

இந்த மாதிரியான நீண்டதொரு இரவில்

அவளை என்னுடைய கரங்களில் 

ஆதரவாக தாங்கியிருக்கிறேன். 

அவளை இழந்த என் ஆன்மாவும் 

அமைதியிழந்து தொலைவில் 

இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது. 

 

எனக்காக அவள் விட்டுச்சென்ற 

கடைசி வலியும் துன்பமும் இதுதான் என்றாலும் கூட

அவளுக்காக நான் எழுதும் 

கடைசிக் கவிதை இதுதான் என்றாலும் கூட

மறப்பதுதான் நீண்டு நெடியதாக இருக்கிறது. 


Source: “Tonight I can write the saddest lines” by Pablo Neruda 

In Tamil Translation: Saravanan. K