Thursday, 13 April 2023

என்றாவது ஒருநாள் நீயும் நான் நேசித்ததைப் போல நேசிப்பாய் (Someday you’ll Miss Me like I Missed You) by Summer

என்றாவது ஒருநாள் 

நீ இன்றி நான் வாடுவதைப்போல 

நீயும் வாடித் தவிப்பாய். 

 

என்றாவது ஒருநாள் 

உனக்காக நான் வடித்த கண்ணீர் வெள்ளம் 

உன் கண்ணிலும் வடியும். 

என்றாவது ஒருநாள் 

உன்னை மீட்டெடுக்க 

நான் செய்த அனைத்து முயற்சிகளையும்  

என்னை மீட்டெடுக்க நீயும் செய்வாய். 

 

என்றாவது ஒருநாள் 

உன்னை ஆராதித்த இதயத்தைத்தான் 

நீ உடைத்து நொறுக்கியிருக்கிறாய் 

என்ற உண்மை உனக்குப் புரியும். 

 

என்றாவது ஒருநாள் 

உன்னுடைய கிறுக்குத்தனங்களை எல்லாம் 

பொறுத்துக்கொண்ட ஒரே பெண் நான் மட்டும்தான் 

என்ற உண்மை உனக்குப் புரியும். 

 

என்றாவது ஒருநாள் 

வலி என்றால் என்ன என்பது உனக்குப் புரியும். 

நீ தந்து சென்ற வலி என்னை எப்படி

வருத்துகிறது என்பதும் உனக்குப் புரியும். 

 

என்றாவது ஒருநாள் 

நீ உடைத்து நொறுக்கி

தலைகீழான என் வாழ்வைப்போல 

உன்னுடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறும்.

என்றாவது ஒருநாள் 

நீ என்னைக் காயப்படுத்தியதைப் போல 

உன்னையும் யாரேனும் காயப்படுத்துவார்கள். 

 

என்றாவது ஒருநாள் 

வாழ்க்கையில் தனிமை என்பது என்ன 

என்பது உனக்குப் புரியும்.

 

என்றாவது ஒருநாள் 

உலகமே நீதான் என்றிருந்த நான்  

உனக்கு எவ்வளவு முக்கியமானவளாக இருந்தேன் 

என்பதை உன்னால் உணர முடியும். 

 

என்றாவது ஒருநாள் 

என்னிடம் நீ விட்டுச் சென்ற காயங்களின் வலிகளை 

தனிமையில் உணரத்தான் போகிறாய். 

 

என்றாவது ஒருநாள் 

உன்னிடம் வந்துவிட நான் செய்த 

அத்தனை பிரயத்தனங்களையும் 

நீயும் என்னிடம் வருவதற்காக செய்யத்தான் போகிறாய். 

 

என்றாவது ஒருநாள் 

உன்னை நான் காதலித்ததைப் போல 

நீயும் என்னைக் காதலிக்கத்தான் போகிறாய். 

ஆனால் அந்த நாள் 

நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்க மாட்டேன்.  


Source: “Someday you’ll Miss Me like I Missed You” by Summer 

In Tamil: Saravanan. K