Thursday, 13 April 2023

ஓர் அயர்லாந்து வீரனின் மரண விண்ணப்பம் (An Irish airman Foresees His Death) by W. B. Yeats

என் தலைக்கு மேல்

சுற்றும் மேகப் பொதியொன்றில்தான்

என் தலையெழுத்து முடியும் நேரம்

குறிக்கப்பட்டிருக்கிறது என்பது

எனக்குத் தெரியாமல் இல்லை.

 

நான் சமர் புரியும் எவருடனும்

எனக்கு வெளிப்படையான வெறுப்பு

என்று எதுவும் இல்லை;

நான் காத்து நிற்கும் எவருடனும்

எனக்கு பிரத்யேகமான பிணைப்பு 

என்று எதுவும் இல்லை.

 

கில்டார்டன் கிராஸ் எனது ஊர்;

அங்கிருக்கும் என் மக்கள்

பசியறியும் பாமரர்கள்.

 

இதுதான் அறுதியும் இறுதியும்

என்ற எந்தப்புள்ளியும் 

அவர்களை நட்டமடைய

செய்யப் போவதும் இல்லை;

முன்னமிருந்ததை விட

அவர்களை மகிழ்ச்சியடைய

செய்யப்போவதும் இல்லை.

 

 நான் போர்த் தொழில் புரிகிறேன்;

ஆனால் அதற்குக் காரணம்

சட்டமோ, கடமையோ

அரசியல்வாதிகளோ, அல்லது

இங்கே குதூகலித்துக் குதிக்கும் 

கூட்டமோ அல்ல.

 

தரம் பிரித்தறியாத

என் மகிழ்ச்சியின் உன்மத்தம்

என்ற ஒன்றுதான்

இந்த மேகக்கூட்டத்தின்

அனாந்தரத்துக்குள் என்னை

அனாதையாக்கித் தள்ளியுள்ளது.

 

என்னுள் முட்டி மோதும்

இவை அனைத்தையும்

என் மனம் சீர் தூக்கி பார்க்காமல் இல்லை;

இனி நான் வாழப்போகும்

காலங்கள் யாவும்

பயனில்லாத வெறும் மூச்சுக்காற்றேயன்றி

வேறொன்றுமில்லை.

வாழ்வையும் சாவையும்

ஏதோ ஒரு புள்ளியில் சமன்படுத்தி நிற்கும்

இந்த கால மிச்சத்தின்

உதவாக்கரை மூச்சுக்காற்றேயன்றி

வேறொன்றுமில்லை. 

_________________________


Source: W. B. Yeats’ “An Irish airman Foresees His Death”

In Tamil Translation: Saravanan. K