Friday, 3 March 2023

என்னை நீ மறந்தால் (If You forget me) By Pablo Neruda

ஒன்று மட்டும் உனக்குத் தெரிய வேண்டும்

என்று நினைக்கிறேன்.

அது இப்படித்தான் இருக்கும்:

இலையுதிர் காலத்தில்

என் ஜன்னலுக்குப் பக்கத்தில்

மெதுவாக விழுகின்ற 

மரமொன்றின் இலைகளில்

பளிங்கு போலத் தெரிகின்ற

நிலவை நான் பார்த்தாலோ

 

எரிதழலில் சிதறும் கைக்குள் பிடிபடாத

சாம்பலை நான் தொட்டாலோ

அல்லது

எரிந்தபின் சுருங்கிப் போன

விறகினைத் தீண்டினாலோ

அனைத்தும் உயிர்ப்புடன் இருப்பதைப் போல்

என்னை உன்னிடம் கொண்டு சேர்க்கின்றன.

 

வாசனைகளும்

விளக்குகளும்

உலோகங்களும்

சிறு படகாய்

எனக்காகக் காத்திருக்கும்

உன்னுடைய தீவுக்கு

என்னைக் கொண்டு செல்கின்றன.

 

நல்லது அன்பே!

சிறுகச் சிறுக என்னை நீ நேசிப்பதை

நிறுத்திக் கொண்டால்

நானும் உன்னை நேசிப்பதை

சிறுகச் சிறுக நிறுத்திக் கொள்வேன்.

திடீரென்று

என்னை நீ முற்றிலும் மறந்தால்

என்னை நீ தேடாதே.

ஏனென்றால்

அதற்கு முன்பாகவே

உன்னை நான் முழுமையாக

மறந்திருப்பேன்.

 

இது என் வாழ்க்கையில் புகுந்து சென்ற 

அர்த்தமற்ற, நீளமான

பைத்தியக்காரத்தனமான

வெறும் காற்று என்று நினைத்து

என் உயிர் தங்கும்

இதயத்தின் கரைகளில்

என்னை விட்டுவிட்டு

நீ விலகிச் செல்ல முயன்றால்

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்

அந்த நாளில்

அந்த மணித்துளிகளில்

என் உயிர் தங்கும் இதயத்தைப்

பற்றி இருக்கும் என் கைகளை

நான் நழுவ விட்டுவிடுவேன்.

இன்னொரு இதயம்

நோக்கிய பயணத்திற்காக.

 

ஆனால்….

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு கணமும்

தீராத இனிமையுடன்

எனக்காக விதிக்கப்பட்டவள்

நீதான் என்பதை நீயுணர்ந்தால்

ஒவ்வொரு நாளும்

மலரொன்று என்னைத் தேடிக்கொண்டு  

உன் இதழ் நாடி வந்தால்

என் அன்பே!

என்னுடையவளே!

என்னுள் என்றோ எரிந்து தணிந்த தழல்

மீண்டும் எரியத் தொடங்கும்.

என்னுள் எதுவும் அணையாது.

எதுவும் மறக்காது.

என் காதல்

உன் காதலைத் தின்று வாழும்.

அன்பானவளே!

நீ வாழும்வரை அது உன் கரங்களில் வாழும்.

என்னை என்றுமே விட்டு விடாமல்.

 

---பாப்லோ நெருதா

(Source: Pablo Neruda’s “If you forget me” )

தமிழ் மொழிபெயர்ப்பு: சரவணன். கா