Friday, 3 March 2023

ஓஸிமாண்டியஸ் (Ozymandias) by P.B. Shelly

பழமையான நாட்டின் வழிப்போக்கன் ஒருவன்

சந்தித்த வேளையில் சொன்னான்:

பெரியதொரு இரு கற்கள்

உடலின்றி கால்களுடன்

பாலையில் கேட்பாரன்றி

தனிமையில் கிடக்கின்றன.

சிதைந்த முகம்

பாதி தெரியும்படி மண்ணில்

பக்கத்தில் புதையுண்டு கிடக்கிறது.

 

உயிரற்ற கற்களில்

உணர்வுகள் தெரிந்ததென்றால்

முகத்தில் வடிந்த

கடூரமும், சுருங்கிய உதடுகளும்

இரக்கம் மறந்த முகமும்

வடித்த சிற்பியால்  

உணர்வாகி இருக்க வேண்டும்.

வடித்த கைகள் அவற்றைக் கேலி செய்ததோ!

உணர்ந்த இதயம்

அதைத் தன்மயமாக்கியதோ!.

 

கல்லின் பீடத்தில் கெக்கரிக்கும்

வாக்கியங்கள்:

நான்தான் ஓஸிமாண்டியஸ்.

அரசருக்கெல்லாம் அரசன்.

வலிந்தும் வருத்தியும் நான் புரிந்த

சாதனைகளைப் பார்…”

 

எஞ்சியிருந்த எச்சங்களுக்குப் பக்கத்தில்

மிஞ்சியிருந்ததென்று எதுவுமில்லை.

அடையாளம் அற்றுப்போய்

அரச அகங்காரம் நொறுங்கிய

குப்பைக்குப் பக்கத்தில்

எல்லை தெரியாமல்

அம்மணமாகத் தெரிந்தது என்னவோ

தனித்து விடப்பட்டு

நீண்டு கிடந்த  மணல் வெளி மட்டும்தான். 

………

_______________________

Source: P.B. Shelly’s well known, critically acclaimed poem “Ozymandias”

Translated into Tamil by Saravanan. K