Wednesday, 7 September 2022

நாலு ரூபாய் (Four Rupees) by R. K. Narayan

 

R. K. Naraayan

(
ஆர்.கே. நாராயண் எழுதிய “Four Rupees” என்ற சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.  அவர் எழுதிய பல சுவையான சிறுகதைகளுல் இந்தக் கதையும் ஒன்று.  "Under the Banyan Tree & Other Stories” என்ற நூலில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது) 

தான் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது ரங்கனுக்கு ஒருபோதும் நிச்சயமாக தெரிந்ததே இல்லை. கபீர் சந்தில் இருக்கும் அவனது சிறிய வீட்டை விட்டு வெளியே கிளம்புவான், சந்தை சாலையில் இருக்கும் ஒரு திருப்பத்தை அவன் அடையும் சமயம் ஏதாவது ஒரு எடுபிடி வேலை அவனுக்காக காத்திருந்ததைப்போல அவனுக்குக் கிடைக்கும். இன்று அவன் சந்தையில் இருக்கும் அலங்கார நீரூற்றின் அருகாமையில் உட்கார்ந்திருக்கும்போது முற்றிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு வேலை அவனைத் தேடி வந்தது. நகர் விரிவாக்கப்பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் வேலை பார்க்கும் வேலையாள் ஒருவன் கண்களில் விளக்கெண்னையை ஊற்றிக்கொண்டு எதையோ தேடியலைந்து கொண்டிருந்தான். அவனே இவனிடம் வந்து விவரத்தை சொன்னான்: “எங்கள் வீட்டிலிருந்த பித்தளைப் பானை ஒண்ணு கிணத்துக்குள்ள விழுந்துருச்சு. அதை வெளியே எடுக்கணும். உனக்கு அப்படி யாரையாவது தெரியுமா?’’ 

அதுக்கு அவங்க எவ்வளவு குடுப்பாங்க? 

அதைச் செய்ய உனக்கு எவ்வளவு வேணும். அதைச் சொல்லு” 

முதல்ல நான் அந்த கிணத்தைப் பார்க்கணும். இரண்டு ரூபாய்க்கு குறைஞ்சு என்னால வேலை செய்ய முடியாது” என்றான் ரங்கன். 

சரி. என் பின்னாடி வா” என்று வந்தவன் சொன்னான். ரங்கனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் சொன்னது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது அவன் ஒருக்காலும் எதிர்பார்க்காத ஒன்று. இதற்கு முன் அவன் எந்த ஒரு கிணற்றுக்குள்ளும் குதித்ததில்லை. தேவையில்லாமல் மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்து வரமுடியாது என்று சொல்ல முயற்சித்தான். ஆனால் வந்தவன் விடுவதாய் இல்லை. அவன் ரங்கனின் மணிக்கட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தன்னோடு ஏறக்குறைய இழுத்துக்கொண்டு சென்றான். ரங்கனும் தனது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே வந்தான். “எனக்கு கிணத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாதுய்யா. என்னை விடுயா” என்று சொல்லிப்பார்த்தான். அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றான். “அய்யோ அப்படி சொல்லாதே. முதல்ல கிணத்தை வந்து பார்” என்று அவனை நெருக்கிப் பிடித்தவாறு சொன்னான் அந்த வேலையாள். அவனே மேலும் தொடர்ந்தான் “கடந்த நாலு நாளா அந்த வீட்டுக்கரங்க என் பிராணனை வாங்கிக்கிட்டு இருக்கானுங்க. பானைய வெளியே எடுக்க இன்னைக்கு நான் ஏதாவது செய்யலேண்ணா அவ்வளவுதான் என்னை வேலையை விட்டே தூக்கிருவாங்க” 

ஆனால் எனக்கு கிணத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாதே” 

உஷ். இந்த உளறல் எல்லாம் எங்கிட்ட செல்லாது “ என்று அவனைக் கடிந்துகொண்டான் வேலையாள். ரங்கனைப் பார்த்து லேசாக பூடகமாக சிரித்துக்கொண்டு சொன்னான்: ஏதாவது கூடக்குறைய ஒரு அனா இல்லை இரண்டு அனா வேணுமின்னா கேளு. அதைவிட்டு இந்த மாதிரி குந்தாங்கூனி வேலையெல்லாம் கூடாது. புரியுதா” 

 ஆனா...ஆனா....” என்று ரங்கன் தடுமாறினான். வந்தவன் அவனுக்கு புகைப்பதற்கு பீடி ஒன்றைக் கொடுத்து அவனை அமைதியாக்கினான். விதிவிட்ட வழி என்று ரங்கன் அவனை பின் தொடர்ந்தான்.  

நகர் விரிவாக்கத்தில் அமைந்திருந்த அந்த பங்களாவின் வாசலின் எல்லோரும் குழுமியிருந்தார்கள். முதலாளி, அவரது மனைவி மற்றும் இரண்டு பையன்கள். வேலைக்காரனைப் பார்த்த மாத்திரத்தில் கூக்குரலிட்டார்கள்: “யாரையாவது பார்த்தியா?” 

இந்த கொண்டாந்திருக்கேன் பாருங்க” என்று ரங்கனை சுட்டிக்காட்டி சொன்னான் வேலைக்காரன். என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான் ரங்கன். முதலாளி சொன்னார்: “ பித்தளைப் பானை ஒண்ணு கிணத்துக்குள்ளாற விழுந்துருச்சு. நீ அதை வெளியே எடுக்கணும்” 

 நான் எப்படி முதலாளி ...என்று இழுத்தான் ரங்கன். அந்த சமயம் பார்த்து வேலைக்காரன் குறுக்கே விழுந்து சொன்னான்: “ இந்தப் பிரச்சினையை எங்கிட்ட விடுங்க முதலாளி. அவன் அதை செஞ்சிருவான்.” இதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரும் ஏதோ ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார்கள் என்பது முதலாளிக்குப் புரிந்துவிட்டது. பிறகு வெறுமனே சொன்னார்: “சரி. சரி. முதல்ல கிணத்தைப் பார்க்கலாம்.  

அவனை வீட்டுக்குப் பின்புறமாகக் கூட்டிச்சென்றார்கள். முதலாளியும் மற்றவர்களும் தன்னை ஒரு முக்கியமானவன் போல் கருதி நடந்துகொள்வதைப் பார்த்த ரங்கன் தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து சிலாகிக்கத் தொடங்கிவிட்டான். அவனைச் சுற்றி இருந்த எல்லோரும் அந்த பித்தளைப்பானை எப்படி உள்ளே விழுந்தது என்பதை அவனுக்கு விளக்கிக்கொண்டு இருந்தார்கள். உம்மென்று அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான் ரங்கன். பிறகு சொன்னான்: “கயிறு இத்துப்போயிருக்கும்” அதைக் கேட்டவுடன் அவர்கள் அதனை ஆமோதித்த விதத்தைப்பார்த்து தான் ஒரு மிக முக்கியமான தகவலை அவர்களுக்கு தெரிவித்து விட்டதைப்போல நெஞ்சு விம்ம புளகாங்கிதம் அடைந்தான் ரங்கன். பிறகு அந்தப்பானையின் சரித்திரத்தை அவர்கள் அவனுக்கு விளக்கினார்கள்: அது எந்த மாதிரியான ஒரு புராதனப் பாத்திரம், எப்படி கொள்ளுப்பாட்டனின் கலியாணத்துக்கு சீர்வரிசையாக வந்தது அது, எப்படி பரம்பரை பரம்பரையாக கைமாறி வந்துள்ளது என்பதையெல்லாம் அவர்கள் சொல்ல சொல்ல இடித்த புளி போன்று கேட்டுக்கொண்டு இருந்தான் ரங்கன். அந்த வேலைக்காரனை கோபமாக அவர்கள் பார்த்தார்கள். வீட்டுக்கார அம்மையார் கத்திச் சொன்னார்: “இந்த பாத்திரத்தை தொடாதேண்ணு இந்த முட்டாள்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருப்பேன். கேட்டானா அவன்....”  

கிணத்துக்குள்ள இருந்து தண்ணி எடுக்கணும்னா துத்தனாகப் பாத்திரத்தை மட்டுந்தான் பயன்படுத்தணும்” என்று பெரிய அறிஞன் ஒருவன் பேசுவதைப்போல சொன்னான் ரங்கன். அவன் சொன்னது நியாயம் என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். தான் ஒரு நிரூபிக்கப்பட்ட முக்கியஸ்தன் என்ற எண்ணம் ரங்கனுக்கு ஏற்பட்டது.  

அவர்கள் கிணற்றின் வாயை மூடியிருந்த தடுப்பை அகற்றினார்கள். ரங்கன் உள்ளே எட்டிப்பார்த்தான். அவனது இருதயம் காற்று வாங்கிக்கொண்டதைப் போல இருந்தது. கரடு முரடாக இருந்த அந்த இருள் சூழ்ந்த சுரங்கத்துக்கு அப்பால் அடியில் தேங்கியிருந்த நீர்த்திட்டு லேசாக மின்னியது. “ ரொம்ப ஆழமான கிணறாக இருக்கும் போலிருக்கே” என்று சொன்னான் ரங்கன். 

வெறும் அறுபது அடிதான்” 

நாங்க பொதுவா நாப்பது அடிக்கு மேல இருக்குற கிணத்துக்குள்ள எறங்குறது இல்லையே” என்றான் ரங்கன். 

உனக்கு எட்டு அனா அல்லது அதுக்கு மேலே வேணுமின்னாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று அவர்களும் விடுவதாய் இல்லை.  

எனக்கு நாலு ரூபாய் வேணும். இல்லாட்டி என் உயிரை தேவையில்லாம பணயம் வைக்க முடியாது” என்று பதில் சொன்னான் ரங்கன்.  

கொஞ்ச நேரம் முணுமுணுத்த பின் அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். பிரச்சினையில் இருந்து தப்பிக்க ரங்கன் செய்த கடைசி முயற்சியும் இறுதியில் பலனற்றுப்போனது. ஒரே சமயத்தில் நாலு ரூபாயை ஒட்டுமொத்தமாக அவன் சம்பாதித்ததே இல்லை. நாலு ரூபாய் என்பது அவன் மட்டிலும் ஒரு கவர்ச்சியான தொகைதான். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எந்த வேலைக்கும் போகத் தேவையில்லை. பொண்டாட்டியையும், மாமியாரையும் ஒரேயடியாக ஊமையாக்கிவிடமுடியும். இருந்தாலும் தலைசுற்ற வைக்கும் ஆழத்தில் கிடக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரை ஒருதடவை எட்டிப்பார்க்கும்போது நாலு ரூபாய் தந்த சந்தோஷம் காணாமல் போய்விடுகிறதே. அப்படியே ஓடிப்போய்விடலாமா என்றுகூட யோசித்தான். திருப்திகரமான தொடக்கநிலை ஆய்வு ஒன்றை மேற்கொண்ட மனிதனைப்போல கிணற்றில் இருந்து திரும்பி எல்லோரையும் பார்த்து சொன்னான்: “சரி.. எல்லாம் சரியாத்தான் இருக்கு. நான் இன்னைக்கு சாயங்காலம் வர்ரேன். இப்ப நான் வீட்டுக்குப் போகணும்.” 

ஏன்?” 

அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. தான் இன்னும் சாப்பிடவில்லை என்று முணுமுணுத்தான். உடனடியாக அவனை தாழ்வாரம் வழியாக கூட்டிக்கொண்டு சென்று அவனுக்கு முன்னால் இலை ஒன்றை விரித்து உணவு பரிமாறினார்கள். தான் எங்கிருக்கிறோம் என்பது கூடத்தெரியாமல் வயிறுமுட்ட சாப்பிட்டான் ரங்கன். அவனைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு இன்னும் அதிகமாகச் சாப்பிடச் சொன்னார்கள். வெற்றிலையும் பாக்கும் கொடுத்தார்கள். உதடுகள் ரத்தச் சிவப்பாக மாறும்வரை அவன் அதை குதக்கி மென்றான். அந்த வீட்டில் ஒரு மரியாதைக்குரிய விருந்தினன் போல தன்னை நினைத்துக்கொண்டான் அவன். ஆனாலும் இந்த மரியாதையெல்லாம் எதற்கு என்று நினைக்கும்போது அவனுக்கு வயிறு மொல மொலவென்றது. தற்சமயம் இந்த சிக்கலில் இருந்து விடுபடுவது அசாத்தியமானது என்பது அவனுக்குப் புலனாகிவிட்டது. அரைமணி நேரம் அவனை ஓய்வெடுக்க அனுமதித்தார்கள். பிறகு அவனை கிணற்றுக்கு வரச்சொன்னார்கள். தான் ஏதோ ஒரு சபிக்கப்பட்ட பிறவியைப்போல இருந்தது அவனுக்கு. கிணற்றின் பாதாளத்தை உற்று நோக்கியபடி நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். தன்னை விடுவித்துக்கொள்ள இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்தான்: “என்னால் முடியாது....எனக்கு ஒண்ணும் தெரியாது....”  

அய்யோ...அப்படி சொல்லாதேயப்பா” என்று அவர்கள் எதிர்கூக்குரல் எழுப்பினார்கள். தான் நீரில் மூழ்கிச் சாவதைப் பார்க்க இவர்கள் அனைவரும் ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு நிற்கிறார்கள் என்று ரங்கன் ஒரு நிமிடம் குழம்பித்தான் போனான். எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு தப்பித்துப்போய் விடலாம் என்றுகூட ஒரு கணம் நினைத்தான். தன்னைச் சுற்றி நின்றவர்களை ஒரு கணம் நோட்டம் விட்டான். அவர்கள் அவனைச் சுற்றி ஒரு வியூகம் அமைத்து நின்றார்கள். தப்பிக்க நினைத்தால் அவர்களே அவனை குண்டுகட்டாக தூக்கி கிணற்றுக்குள் தள்ளிவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் போனது நிதர்சனமாகத் தெரிந்தது. கசங்கிப்போயிருந்த தனது சட்டையைக் கழற்றினான். வேஷ்டியை கோவணம் போல மடித்து இறுக்கிக் கட்டிக்கொண்டான். கயிறு ஒன்றை வரவழைத்தான். கிணற்றுக்கு குறுக்கே இருந்த கம்பத்தில் அதன் ஒரு நுனியைக் கட்டினான். மற்றொரு நுனியை கிணற்றுக்குள் விட்டான். கிணற்றுச் சுற்றுசுவர் மீது ஏறி கயிற்றின் வழியாக மெதுவாக இறங்கினான். சுவற்றின் இருபக்கமும் அழுந்திக்கொள்ள கால்களை விரித்துக்கொண்டான். அப்படியே உள்ளே இறங்கினான். கீழே குனிந்து பார்க்க அவன் துணியவில்லை. உள்ளிருந்த காற்று வெதுவெதுப்பாகவும், இருட்டாகவும் மாறிக்கொண்டு வந்தது. அண்ணாந்து பார்த்தான்- ஊதா நிறத்தில் வானம் ஒரு சிறுவளையமாகத் தெரிந்தது, கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தின் இடுக்கு ஒன்றில் முளை விட்டிருந்த அரச மரக்கன்று ஒன்று தெரிந்தது. மேலே இருந்து அவனை ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்த முகங்கள் மங்கலாகத் தெரிந்தன. “ கவனமா இரு” யாரோ கத்தினார்கள். “ ஏன் இன்னும் தயங்கி நிக்கிறே”. “நான் மேலே வர்ரேன். இதுக்கு மேலே என்னால போக முடியாது. அவர்கள் விடவில்லை. அவனை ஊக்கப்படுத்தினார்கள். இன்னும் சில அனாக்கள் தருவதாய் உறுதியளித்தார்கள். “ நீ ஏற்கனவே பாதி வழி தாண்டிட்டே.....” 

நான் மீண்டு வரலேண்ணா, தயவு செஞ்சு எம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிடுங்க”. இதைக் கேட்டவுடன் மேலே நின்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கழிவிரக்கம் மேலிட தனக்குத் தானே பேசிக்கொண்டான். “வேறு வழியே இல்லை. நான் செத்துப்போக வேண்டியதுதான்.” இன்னும் உள்ளே இறங்கினான். ஒவ்வொரு அடியிலும் இருள் அதிகமாக கவிழ்ந்துகொண்டே வந்தது. பிசாசின் வாய்க்குள் போவது போலிருந்தது. காதுகள் மந்தமாகிவிட்டதைப்போல இருந்தது. நெஞ்சுக்குள் கனமாக ஏதோ வந்து அடைத்துக் கொண்டதைப்போல உணர்ந்தான். கண்கள் மயங்கி செருகிக் கொண்டன. கடைசி எட்டு வைக்கும் போது அவன் அரை மயக்கத்தில் இருந்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. மூளை மட்டும் அடித்துக்கொண்டு இருந்தது. நாலு ரூபாய், நாலு ரூபாய். நான் செத்துப்போகப்போறேனே...என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அல்லது நான் செத்துதான் போய்விட்டேனா? பனிக்கட்டி போலிருந்த தண்ணீர் அவனது கால்களை நனைத்தது. எதையோ நினைத்துக்கொண்டவனாய் கீழே குனிந்தான். கை நிறைய தண்ணீரை எடுத்துப் பருகினான். பிறகு நாலு ரூபாய், நாலு ரூபாய் என்று சொல்லிக்கொண்டே நீருக்குள் பாய்ந்தான். கிணற்றின் அடியில் மணற்பரப்பை அவன் கைகள் துலாவின. கடைசியில் அறுந்துபோன கயிறு ஒன்றின் நுனியைக் கைப்பற்றினான். அவன் அதைப் பிடித்து இழுத்த போது அந்தப் பித்தளைப் பாத்திரமும் அதனோடு சேர்ந்தவாறு வந்தது. 

அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அவனை மேலே இழுக்க வேண்டியிருந்தது. பேச்சு மூச்சற்று சுமார் ஒருமணி நேரம் தரையில் கிடந்தான் அவன். கண்விழித்து பார்த்தபோது அவர்கள் அவனை நோக்கி சொன்னர்கள்: நீ ஒரு நல்ல மனிதனப்பா...இனிமே ஏதாவது உள்ளே விழுந்தா உன்ன கூப்பிடுறோம். நீ எங்க தங்கியிருக்கே?” அவன் தனது இருப்பிடத்தைச் சொல்ல மறுத்துவிட்டான். “என் கூலிய குடுங்க..நான் போகணும்”. அவர்கள் நான்கு ரூபாயும் நான்கு அனாவும் தந்தார்கள். அவன் அதனைப் பார்த்தான். பிறகு அவர்களைப் பார்த்துக் கெஞ்சினான்: “எனக்கு நாலு ரூபாயும் பன்னிரண்டு அனாவும் தர்ரதா உறுதி சொன்னீங்களே எஜமான்!” இதைக் கேட்டவுடன் அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. “ஏண்டா. உன் பேராசைக்கு ஒரு எல்லையே இல்லையா? அந்தப் பாத்திரம் கூட இத்தனை ரூபாய் பெறாது. நாங்க உனக்கு சாப்பாடு போட்டிருக்கிறோம். எல்லாம் கொடுத்திருக்கோம்..போ...போ...திருப்திப்பட கத்துக்கோ”  

இந்த மாதிரியான முக்கியஸ்தர்களை நாம் ஒருக்காலும் திருப்திப்படுத்த முடியாது. எல்லா இடங்களிலும் இவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள்” என்று அங்கிருந்த ஒருவர் கருத்து தெரிவித்தார்.  

ரங்கன் வீட்டுக்குச் சென்றபோது வழக்கம்போல் அவன் மனைவியும் மாமியாரும் வாசற்படியில் நின்று கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டவுடன் அவன் மனைவி பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தாள். “ஏழு மணியாச்சு...இனிமே எப்ப நான் சாமான் வாங்கி...எப்ப சமைக்க? நான் என்ன உனக்கு பிறவி அடிமைண்ணு நினைப்போ! இன்னைக்கு ராத்திரி உனக்கு சாப்பாடு போடாம பட்டினி போட்டாத்தான் உனக்கு நல்ல பாடம் கிடைக்கும். .....”ரங்கன் தன்னிடமிருந்த நாலு ரூபாயையும் நாலு அனாவையும் எடுத்து ஆட்டிக்காண்பித்தான். “ நாலு ரூபாயா! உண்மையச் சொல்லு நீ இத திருடல? அவன் தனது முழங்கையிலும், முட்டியிலும் ஏற்பட்ட சிராய்ப்புகளை அவளுக்குக் காண்பித்து நடந்த எல்லாவற்றையும் விளக்கினான். அதைக் கேட்டபின் அவர்களுக்கு சிரிப்பு தாங்காமல் சொன்னார்கள்: “ நீ கிணத்து பக்கமா போவது எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சதே இல்லையே. எங்கோ எப்படியோ கஷ்டப்பட்டு முட்டி கிட்டி எவன் பாக்கெட்லெ இருந்தோ பணத்தை தட்டிக்கிட்டு வந்துட்டே போலிருக்கு”  

மூலம்: Under The Banyan Tree & Other stories by R. K. Narayan

தமிழில்: சரவணன் கார்மேகம்