Wednesday, 7 September 2022

தபால் அலுவலகம் (Post Office) – தாகூரின் புகழ் பெற்ற சிறுகதை


உள்ளாப்பூர் என்ற அந்த ஊரில்தான் நமது தபால்காரன் தனது பணியை ஆரம்பித்து இருந்தான். அந்த ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் அருகாமையில் “இண்டிகோ” சாயத்தொழிற்சாலை ஒன்று அமைந்து இருந்தது. அந்த தொழிற்சாலைக்கு உரிமையாளனான ஆங்கிலேயன் ஒருவன் எப்படியோ தனது முயற்சியால் அங்கே ஒரு தபால் அலுவலகத்தையும் தருவித்து இருந்தான்.  

நமது தபால்காரன் கல்கத்தாவைச் சேர்ந்தவன். இவ்வளவு தூரத்தில் அந்த குக்கிராமத்தில் வேலை செய்வது அவனுக்கு சிரமமாக இருந்தது. தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்பட்ட மீனின் நிலையில் இருந்தது அவன் மனநிலை. நாலா பக்கமும் நன்கு நெருங்கி வளர்ந்த புதர்அருகில் இருந்த பசுமையான வயல்வெளிவற்றியும் வற்றாமலும் இருந்த ஒரு சிறு குட்டை இவைகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது தகரத்தால் கூரை வேயப்பட்ட ஓர் இருண்டு போன அறை. அதுதான் அவனது அலுவலகம் தங்கும் இடம் எல்லாம்.  

இண்டிகோ தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளிகளுக்கு ஓய்வு என்பது இருப்பதில்லைமேலும் நாசூக்காக மேல்குடி மனோபாவத்துடன் வாழ விரும்புபவர்களின் விரும்பத்தக்க நண்பர்களாகவும் அவர்களால் இருக்க முடிவது இல்லை. நமது கல்கத்தா அன்பருக்கு மக்களுடன் பின்னிப்பிணைந்து ஒன்றோடு ஒன்றாக வாழும் கலையும் தெரிந்திருக்கவில்லை. புதியவர்களைக் கண்டால் ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கர்வமாகப் பேசுவான். இல்லை முகம் சுளிப்பான். எப்படி பார்த்தாலும் அவனுக்கென்று அந்த ஊரில் நண்பர்கள் என்று எவரும் இல்லை என்று சொல்லலாம். அது குறித்து அவனால் செய்ய முடிவதும் ஒன்றும் இல்லை.  

அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிப்பார்ப்பான். அவனுடைய வாழ்க்கையை இன்பத்தால் நிறைக்க இலைகளின் அசைவுவானில் உலவும் மேகங்கள் போதும். இவைகளுக்கு உணர்வு இருப்பாதாக நினைத்து அவைகளுக்கு உயிர் கொடுத்து சந்தோசப்பட்டுக்கொள்வான். ஆனால் “ஆயிரத்தொரு அரேபிய இரவு”களில் வரும் பூதம் ஒன்று திடீரென்று தோன்றி எல்லா மரங்களையும் இலைகளையும் ஒரே இரவில் வெட்டி வீழ்த்தி அந்த இடத்தில் பளபளவென்று தார்சாலை போட்டு,  மேகங்களை கண்களில் இருந்து மறைக்கும் அளவுக்கு வரிசையாக உயரமாக வீடுகளைக் கட்டி கொடுத்தால் அதுவே இந்த கவிஞனுக்கு ஒரு புது வாழ்வின் பரிசாக அமைந்து இருக்கும் என்பது அந்த கடவுளுக்கு நன்றாகத் தெரியும்.  

தபால்காரனுக்கு சம்பளம் குறைவுதான். அவனது உணவை அவனேதான் சமைத்துக்கொள்ள வேண்டும். அந்த கிராமத்தில் அவனுக்கு எடுபிடி வேலைகளில் உதவியாக இருக்கும் ரத்தன் என்ற அனாதை சிறுமியுடன் தனது உணவைப் பகிர்ந்து கொள்வான்.   

மாலை மங்கிய பின் கிராமத்தின் மாட்டுக்கொட்டகைகளில் இருந்து குப்பென்று சுழல் சுழலாக புகை எழும்பும்ஒவ்வொரு புதரில் இருந்தும் வண்டுகள் கீச் கீச் என்று சத்தம் எழுப்பும்நாடோடி கூட்டம் ஒன்று தாங்கள் வழக்கமாகக் கூடும் இடத்தில் கூடி தங்கள் நாடோடி பாடல்களை அவரவர் செறிவான குரலில் பாடத் தொடங்குவர்இந்தப் பிண்ணணியில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளின் ஊடே இலைகளின் அசைவைக் கவனிக்க நினைக்கும் எந்த கவிஞனுக்கும் முதுகெலும்புக்கு நடுவில் சில்லென்ற ஒரு பேய் நடுக்கம் ஏற்படத்தான் செய்யும். நமது தபால்காரன் எம்மாத்திரம். விளக்கை ஏற்றிவிட்டு, “ரத்தன்” என்று அந்த சிறுமியை துணைக்கு அழைத்துவிடுவான். ரத்தன் அவனுடைய குரலுக்காக வெளியேதான் காத்திருப்பாள். உடனே வருவதற்கு பதிலாக உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு “கூப்பிட்டீங்களா சார்” என்று திருப்பி கேட்பாள்.  

“அங்கே என்ன பண்றே?” என்று இவன் கேட்பான். 

“போய் அடுப்பு பத்த வைக்கணும்” – இதுதான் அவளிடம் இருந்து பதிலாக வரும்.  

“சரி சரி அடுப்பு அப்புறம் பத்த வைக்கலாம். முதல்ல வந்து என்னோட புகையிலை குழாயை பத்த வை” – இப்படி பதில் சொல்வான் தபால்காரன்.  

கடைசியில் ரத்தன் நுழைவாள். அரைகுறையாக எரிந்திருக்கும் கங்கு ஒன்றை தனது கன்னங்கள் உப்பும் அளவுக்கு ஊதி ஊதி புகையிலையை பற்ற வைக்கும் அளவு நெருப்பாக்க முயற்சி செய்வாள். அவள் இப்படி படாத பாடுபட்டுக்கொண்டு இருப்பது அவளோடு அவனை பேச்சு கொடுக்க தூண்டும்.  

“அது சரி ரத்தன்! என்று தொடக்கம் என்னவென்று தெரியாமல் ஆரம்பிப்பான். “உன் அம்மாவை பத்தி உனக்கு எதாவது ஞாபகம் இருக்கா” என்று கேட்பான். இந்த விஷயத்தைப் பற்றி கேட்டால் அவனுக்கு நன்றாக நேரம் போகும். ரத்தனுக்கு கொஞ்சம் நினைவில் இருக்கும்; கொஞ்சம் நினைவில் இருக்காது. அவளுடைய அப்பா அவளது அம்மாவை விட அவளிடம் பாசத்தோடு இருந்ததாகச் சொல்வாள். அவரை தனக்கு நன்றாக நினைவிருப்பதாக சொல்வாள். ஒவ்வொரு நாள் மாலையிலும் வேலை முடிந்த பிறகு அவர் வீட்டுக்கு வருவார்; ஒன்றிரண்டு அவர் அப்படி வந்த மாலை நேரங்கள் புகைப்படங்கள் நினைவில் இருப்பது போல் தனக்கு மிக நன்றாக நினைவிருப்பதாக சொல்வாள். அப்படி அவளுக்கு தனது கடந்த காலம் நினைவுக்கு வரும்போது தபால்காரனின் கால்களுக்கு அருகில் வந்து முட்டியை மடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவாள். தனது தம்பியை மனதுக்குள் நினைத்துக்கொள்வாள். கடந்துபோய்விட்ட மேகமூட்டமாக இருந்த அந்த நாட்களில் எப்படியெல்லாம் அவள் தனது தம்பியுடன் குளத்தங்கரையில் குச்சி ஒன்றால் செய்யப்பட்ட மீன்பிடிக்கம்பு வைத்துக்கொண்டு மீன் பிடித்துக்கொண்டு விளையாடினாள் என்பது அவளது நினைவில் வந்தாடும். இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது நேர தாமதம் ஆகிவிடும். இனிமேல் எப்படி சமைப்பது என்று தபால்காரன் சோம்பல் முறித்துக்கொண்டு அங்கலாய்ப்பான். ரத்தன் உடனே அடுப்பை பற்ற வைப்பாள். சரியாக வேகாத ரொட்டியை எடுத்து உடனே வறுப்பாள். காலையில் சாப்பிட்டது போக ஆறிப்போய் இருக்கும் எஞ்சியது எதையாவது அதனோடு சேர்த்து இரவு உணவாக தயார் செய்து விடுவாள். அவர்கள் இருவருக்கும் தேவையான இரவு உணவாக அது இருந்தது.  

சில மாலை நேரங்களில் காலியாகிப்போய் கிடந்த அந்த கொட்டகையின் ஒரு மூலையில் மேசை ஒன்றின் மீது உட்கார்ந்துகொண்டு தபால்காரனும் தனது வீட்டைப் பற்றிய கனவுகளில் மூழ்குவான். தனது அம்மாவைப் பற்றி, தங்கையைப் பற்றி, தான் இங்கே வந்து கிடப்பதால் யாருக்கு எல்லாம் என்ன துன்பமோ என்று எண்ணிக் கொண்டு தனக்குள்ளேயே மருகுவான். இந்த நினைவுகள் எப்போதும் அவனை அலைக்கழிக்கும். அந்த சிறுமிக்கு முன்னால் அவனுடைய உறவுகளை எல்லாம் நினைவுகூர்ந்து ஆயாசப்பட்டாலும் அந்த தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களிடம் போய் இதைப் பற்றி புலம்ப அவனுக்கு மனம் இடம் கொடுக்காது. அவன் தனது உறவுகளைப்பற்றி ரத்தனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனுடைய அம்மா, சகோதரன், தங்கை எல்லோரிடமும் தான் நெருங்கிப் பழகியது போல் அவர்கள் அனைவரையும் தனது உறவுகளாகப் பாவித்து பேசத் தொடங்கிவிடுவாள்.  உண்மையாக சொல்லப்போனால் அவர்கள் அனைவரையும் தன்னுடைய குழந்தை இதயத்தில் ஒரு சித்திரமாக வரைந்து வைத்துதான் இருந்தாள் அவள்.  

ஒருநாள் மதியம் மழை நின்று போயிருந்தது. குளிர்ந்த தென்றல் மென்மையான வீசிக்கொண்டு இருந்தது. சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் ஈரப்பதத்துடன் இருந்த புற்களின் வாசமும், இலைகளின் மணமும் களைத்துப்போன நிலத்தின் வெம்மையான மூச்சுக்காற்று ஒருவரின் மீது பட்டால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஓர் உணர்வைத் தந்து கொண்டு இருந்தது. ஏதோ ஒரு தீர்மானத்துடன் பறவை ஒன்று ஏதோ ஒரு தீர்மானத்துடன் தன்னிடம் ஏதோ புகார் ஒன்று இருப்பதைப்போல சொன்னதையே சொல்லி கீச்சிட்டுக் கொண்டு இயற்கையின் பார்வையாளர்கள் இடத்தை அந்த மதியம் முழுதும் சுற்றிகொண்டு இருந்தது. தபால்காரனுக்கு பொழுது போகவில்லை. மழையால் கழுவப்பட்டு பளிச்சென்று மின்னிக்கொண்டு இருந்த இலைகளும், மழைபெய்து களைத்துப்போய் ஆங்காங்கே கூடி நின்ற மழைமேகங்களும் மட்டும் பார்வைக்கு நின்றுகொண்டு இருந்தன. தபால்காரன் அவைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான். தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்: “ ஓ! என்னை நேசிக்கும் ஒரே ஒரு ஆத்மா மட்டும் இப்போது என்னருகில் நின்றால்—என்னுடைய இதயத்தில் வைத்து பூஜிக்கும் ஒரே ஒரு அன்புள்ள ஜீவன்.” அந்தப் பறவை சொல்வதும் இதைத்தான், முணுமுணுக்கும் இலை தழைகளும் சொல்ல நினைக்கும் உணர்வும் இதுதான் என்று தனக்குள்ளே நினைத்துக்கொள்வான். ஆழ்ந்த அமைதியான அந்த மதிய நேர வேலை இடைவெளியில் ஏதோ சொச்சமாக சம்பாதிக்கும் அந்த தபால்காரனுக்கு இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை; நம்பவும் மாட்டார்கள்.  

தபால்காரன் பெருமூச்சு விட்டுக்கொண்டான். “ ரத்தன்” என்று சத்தமாக அழைத்தான். நன்றாக விரிந்து வளர்ந்திருந்த கொய்யா மரத்தின் கீழே நின்று கொண்டு பழுக்காத கொய்யாக்களை மும்முரமாகத் தின்று கொண்டிருந்தாள் ரத்தன். தபால்காரனின் குரல் கேட்டவுடன் மூச்சிரைக்க ஓடி வந்து “ கூப்பிட்டீங்களா அண்ணா” என்று கேட்டாள். “ உனக்கு படிக்க கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்” என்றான் தபால்காரன். அன்று மதியம் முழுவதும் அவளுக்கு எழுத்துக்களைப் படிக்கக் கற்றுக்கொடுத்தான்.  

குறைந்த காலத்திலேயே இரட்டை எழுத்துக்களைக் கூட்டி வாசிக்க கற்றுக்கொண்டு விட்டாள் ரத்தன். அந்த பருவ மழை விடாது பெய்யும் என்று தோன்றியது. வாய்க்கால்கள், குளம் குட்டைகள் எல்லாம் நீரால் நிரம்பி வழிந்தன. இரவு பகலாக மழையின் இரைச்சலும், தவளைகளின் கனைப்பொலியும் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்த கிராமத்தின் சாலைகள்  எல்லாம் போக்குவரத்துக்கு தகுதி அற்றவைகளாக மாறிவிட்டன. சந்தைகளைக் கூட குழிவான மிதவைகளில் போட வேண்டி இருந்தது.  

ஒருநாள் கருமேகம் கனமாக போர்த்தி இருந்த நேரம் தபால்காரனின் சிஷ்யை (ரத்தன்) தபால்காரனின் குரலுக்காக வாசலில் காத்திருந்தாள். ஆனால் வழக்கம் போல அவனது குரல் கேட்காததால் நாய்களின் காதுபோல் வளைந்திருந்த தனது புத்தகங்களை இடுக்கிக்கொண்டு மெதுவாக அறைக்குள் நுழைந்தாள். தபால்காரன் நீட்டி விறைத்த உடம்பாய் கட்டிலில் படுத்துக்கிடந்தான். அவன் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறான் என்று நினைத்துகொண்டு சத்தம் செய்யாமல் கால்பெருவிரல்களை ஊன்றி வெளியே செல்ல எத்தனித்த போது “ ரத்தன்” என்று அவளை தபால்காரன் கூப்பிட்டது தீனமாகக் கேட்டது. உடனே அவனை நோக்கித் திரும்பி “ தூங்கிட்டு இருந்தீங்களா அண்ணா” என்று கேட்டாள். “ எனக்கு உடம்புக்கு முடியல. என் தலையை தொட்டுப்பார். கொதிக்குதில்ல” என்று முனகிக்கொண்டே சொன்னான் தபால்காரன்.  

அனாதையைப்போல் கிடக்கும் அந்த சூழலில் மழை பெய்த அந்த மந்தாரமான பொழுதில் நோயில் வாடும் அவனுடைய உடலுக்குக் கொஞ்சம் கனிவான, அன்பான கவனிப்பு அவசியமாக இருந்தது. சலசலக்கும் வளையல்கள் அணிந்த மிருதுவான கைகள் அவனது நெற்றியை வருடினால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று அவனுடைய மனம் ஏங்கத் தொடங்கியது. தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணின் ஸ்பரிசமாக இருந்தால் அது அம்மா அல்லது தங்கையாகவோ இருந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. அவன் அனாதை போல அங்கே கிடந்தது அந்த சமயம் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. ரத்தன் சிறுகுழந்தை போல நடந்துகொள்ளவில்லை. உடனடியாக அவனுடைய அம்மாவைப் போல நடந்துகொண்டாள். கிராம வைத்தியனை உடனடியாக அழைத்து வந்தாள். சரியான இடைவெளியில் அவனுக்கு மருந்து மாத்திரைகளைத் தந்தாள். அவனுடைய தலையணை அருகிலேயே இரவு முழுவதும் கொட்ட கொட்ட கண்விழித்துக் கிடந்தாள். கஞ்சி சமைத்து தந்தாள். அவ்வப்போது “ இப்போது ஓரளவு பரவாயில்லையா அண்ணா” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.  

படுத்த படுக்கையாக இருந்தவன் பலவீனமாகிப்போன உடம்புடன் நகரத் தொடங்குவதற்கு கொஞ்சம் முன்புதான் “ இனிமேல் என்னால் இந்த இம்சையைத் தாங்க முடியாது. இங்கிருந்து உடனடியாக பணி மாற்றம் பெறவேண்டும்” என்று தீர்மானமாகச் சொன்னான். வேலை செய்யும் இடத்தில் சுகாதார வசதிகள் சரியாக இல்லை என்று சொல்லி பணிமாற்றம் வேண்டி உடனடியாக கல்கத்தாவுக்கு கடிதம் ஒன்று எழுதினான். செவிலிப்பெண்ணை போல அவனை கவனித்துக்கொண்ட ரத்தன் தனது பணி முடிந்து விட்டது என்று வழக்கம் போல வாசற்பக்கம் போய் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வழக்கமாக கேட்கும் தபால்காரனின் குரல் இப்போதெல்லாம் கேட்கவில்லை. எதேச்சையாக அவன் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்ப்பாள். தபால்காரன் மேசை மீது அமர்ந்து இருப்பான். அல்லது காலை நீட்டிக்கொண்டு படுக்கையில் விட்டத்தைப் பார்த்த வண்ணம் ஏதோ நினைவில் ஆழ்ந்தவனாய் இருப்பான். ரத்தன் அவனுடைய குரலுக்காக காத்துக் கிடப்பாள். தபால்காரன் தனது விண்ணப்பத்திற்கு பதில் வருமா என்று காத்துக்கிடந்தான். அந்த சிறுமி அவன் சொல்லிக்கொடுத்த பழைய பாடங்களைத் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தாள். அவன் திடீரென்று கூப்பிட்டு எங்கே இந்த இரண்டு எழுத்துக்களை சேர்த்துக்கூட்டிப் படி என்று சொன்னால் என்ன செய்வது என்பதே அவளுடைய பெரிய கவலையாக இருந்தது. ஒரு வாரம் கழித்து தபால்காரனிடம் இருந்து அவள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்த குரல் வந்தது. இதயம் முழுக்க குதூகலிப்புடன் ரத்தன் அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். “ என்னைக் கூப்பிட்டீங்களா அண்ணா?” என்று ஆவலுடன் கேட்டாள்.  

“ நான் நாளைக்கு கிளம்புறேன் ரத்தன்” என்றான் தபால்காரன்.  

“ எங்கே போறீங்க அண்ணா?”  

“ என்னோட வீட்டுக்கு”  

“ திரும்பி வருவீங்கதானே”  

“ இல்லை. வர மாட்டேன்”  

ரத்தன் அதற்குமேல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.  

தனது பணிமாற்றம் குறித்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை எனவும் அதனால் தான் வேலையை விட்டுவிட்டு தனது ஊருக்குக் கிளம்புவதாகவும் என்று எதையோ சொல்வதைப்போல அவளிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.  

வெகுநேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. கூரையில் இருந்த ஓர் ஓட்டையில் இருந்து நீர்த்துளி ஒன்று கீழே வைக்கப் பட்டிருந்த மண் பாத்திரம் ஒன்றில் நேர்த்தியாக வீழ்ந்து கொண்டிருந்தது.  

கொஞ்ச நேரம் கழித்து ரத்தன் சமைப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள். ஆனால் மற்ற நாட்களைப்போல அவள் வேகமாக சமைக்கவில்லை. அவளுடைய சிறிய மூளைக்குள் அவள் சிந்திப்பதற்கு அப்பாற்பட்ட பல புதிய விஷயங்கள் முட்டி மோதிக்கொண்டு இருந்தனதபால்காரன் தனது உணவை முடித்தபோது திடீரென்று அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள். “ அண்ணா! என்னையும் உங்களோடு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?”  

தபால்காரனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “ நல்லா இருக்கு நீ சொல்றது” என்று சிரித்தான். அவள் கேட்டது அவனுக்கு முக்கியமில்லாத விஷயமாகத் தோன்றியதால் அது குறித்து அவளுக்கு விளக்கம் தருவது அவசியம் என்று அவனுக்குத் தோன்றவில்லை.  

அன்றைய இரவு முழுதும் விழித்து இருந்த போதும் கனவு கண்ட போதும் சிரித்துக்கொண்டே அவன் சொன்ன “ நல்லா இருக்கு நீ சொன்னது” என்ற வாக்கியம் அவளை பாடாய்படுத்திக் கொண்டு இருந்தது.  

காலையில் எழுந்தபோது அவனுக்கு குளிக்கத் தேவையான தண்ணீர் தயாராக இருந்தது. கிராமத்தில் வழக்கமாக இருக்கும் ஆற்றில் விழுந்து குளிப்பதைக் காட்டிலும் கல்கத்தாவில் பானைகளில் நீரை முகர்ந்து வைத்து அதில் குளிக்கும் பழக்கம் அவனுக்கு பிடித்து இருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவன் எப்போது கிளம்புகிறான் என்பதை அவளால் அவனிடம் கேட்க முடியவில்லை. அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம் என்று சூரிய உதயத்துக்கு வெகு நேரத்துக்கு முன்பே அவள் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டாள். குளித்து முடித்தபின் அவளுக்கு பரிச்சயமான அவனுடைய குரல் வந்தது. அமைதியாக சத்தம் செய்யாமல் நுழைந்தாள். என்ன கட்டளை என்று கேட்பது போல் தனது எஜமானனின் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டு இருந்தாள். “ நான் போறதைப் பத்தி கவலைப்படாதே ரத்தன். எனக்குப் பின்னாடி இங்கே வரும் தபால்காரர்கிட்டே உன்னைப் பத்தி சொல்லிட்டு போறேன். அவர் உன்னை நல்லா கவனிச்சுப்பார்” என்றான். சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த வார்த்தைகள் உண்மையிலேயே கனிவுடன் சொல்லப்பட்ட வார்த்தைகள்தாம். ஆனால் பெண்ணின் இதயம் என்பது எவராலும் புரிந்துகொள்ள முடியாத புதிர். இதற்கு முன்பு தனது எஜமானன் தன்னை கடுமையாகத் திட்டிய போதெல்லாம் ரத்தனால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்த கனிவான வார்த்தைகளை அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னைக் கட்டுப்படுத்த இயலாதவலாய் உடைந்து வீறிட்டு அழுதாள். “ இல்லை. இல்லவே இல்லை. யார்க்கிட்டேயும் நீங்க என்னைப் பத்தி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இங்கே என்னால் இருக்கவே முடியாது” என்று கதறினாள்.  

தபால்காரன் அப்படியே சமைந்து விட்டான். இதுவரைக்கும் அவன் ரத்தனை அப்படி பார்த்ததே இல்லை. 

 புதிய தபால்காரன் அங்கே வந்துவிட்டான். வேலைகுறித்த விஷயங்களை புதிதாக வந்தவனிடம் ஒப்படைத்து விட்டு அந்த ஊரைவிட்டு கிளம்பத் தயாரானான் தபால்காரன். கிளம்புவதற்கு முன்னால் ரத்தனை அழைத்தான்.  

 “இந்தா பாரு. உனக்குத்தான். கொஞ்ச காலத்துக்கு உனக்கு இது உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்லி பையில் இருந்து தனது ஒரு மாத சம்பளப் பணத்தை எடுத்து பயணத்திற்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அவளிடம் நீட்டினான். ரத்தன் அவன் காலில் விழுந்து கதறினாள். “ அண்ணா! நான் உங்களைக் கெஞ்சிக் கேக்கிறேன். எனக்கு இதெல்லாம் எதுவும் தர வேணாம். என்னைப் பத்தி எந்த விதத்திலும் நீங்க கவலைப்பட வேணாம்.” என்று சொல்லிவிட்டு பார்வையில் இருந்து ஓடி மறைந்து விட்டாள்.  

ஒன்றும் செய்யத் தோன்றாமல் பெருமூச்சு விட்டான் தபால்காரன்தனது படுக்கை சுருளை எடுத்துக்கொண்டான்.  குடையை தோளின் மீது போட்டுக்கொண்டான். பல வண்ணங்களில் செய்யப்பட்டு இருந்த தனது தகரப்பெட்டியை தூக்கிக்கொண்டு வந்த உதவியாளன் ஒருவனோடு மெதுவாக படகினை நோக்கி நகர்ந்தான்.  

நிலத்தில் இருந்து ஊற்றெடுக்கும் கண்ணீர் ஓடையாய் மழையால் நிரம்பிய அந்த ஆறு ஓடுவது போல அவளது கண்ணீர் சுருண்டு சுருண்டு ரத்தனின் முழங்கையை நனைத்தது. படகு மெதுவாக நகரத் தொடங்கியபோது தபால்காரனுக்கு நெஞ்சில் கனமாக ஏதோ வலித்தது. துன்பத்தின் மொத்த உருவத்தையும் முகத்தில் தேக்கி நின்ற ரத்தனின் உருவம் சொல்லவே முடியாத வலியைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு புழுங்கும் நிலமகளைப் போல் தோன்றியது அவனுக்கு. தனித்து விடப்பட்டு உலகின் வெறுக்கப்பட்டவளாய் அனாதையாய் நிற்கும் ரத்தனை தன்னுடன் அழைத்து செல்ல உடனே திரும்பிப்போய் விடலாமா என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் சிந்தித்து முடிப்பதற்குள் காற்று படகை நடு ஆறு வரை இழுத்துப்போய்விட்டதுஆற்றின் ஓட்டத்தில் அந்த ஊரை வெகு தூரம் பின்னுக்குத்தள்ளி படகு நெடுந்தொலைவு சென்றுவிட்டது. ஊரோரம் இருக்கும் சுடுகாடு மட்டும் தெரிந்தது.  

வேகமாக சுழன்று அடித்துச்சென்ற ஆற்றின் நடுவே பயணித்துக் கொண்டு இருந்த தபால்காரன் ஒருவன் தன் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறான்பிரிகிறான்- சாவு என்ற பெரிய பிரிவு வரும்போது அதில் இருந்து யாரும் திரும்பி வரப்போவது இல்லை என்று தனக்குத்தானே தத்துவார்த்தமாக பேசிக்கொண்டு சமாதானம் செய்துகொண்டான்.  

ரத்தனுக்கு எந்த தத்துவமும் தெரியாது. கண்ணீர் ஆறுபோல ஓட அந்த தபால் அலுவகத்தையே சுற்றி சுற்றி வந்தாள். அவளுடைய அண்ணன் என்றாவது ஒருநாள் தன்னைப் பார்க்க கட்டாயம் வருவான் என்ற நம்பிக்கை அவளுடய சிறிய இதயத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டிருக்கிறதோ என்னவோ. அதனால்தான் அவளால் அந்த கிராமத்தை விட்டு அகல முடியவில்லை.  

நம்முடைய மனித இயல்புதான் என்னே! அது செய்யும் தவறுகள் எப்போதும் நிரந்தரமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்னுடைய பலத்தை நிரூபிக்க பகுத்தறிவு நெடுங்காலம் எடுத்துக்கொள்கிறது. கண்ணுக்கு முன்பு உண்மையெனத் தெரியும் விஷயங்கள் நம்பப்படாமல் போய்விடுகின்றன. என்றாவது ஒரு நாள் இதயத்தை மொத்தமாக உறிஞ்சி காயவைத்து வலுக்கட்டாயமாக அதன் ஒவ்வொரு பாகத்தையும் தனித் தனியாக பிரித்து வீசி வெளியேறும் வரை தவறான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் என்பது ஒருவரின் ஆன்மாவரை சென்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. அதற்கு பின்தான் ஞானம் என்ற ஒன்று தரும் வேதனை நம்மை வந்து சேர்கிறது- ஏற்கனவே செய்த தவறுகளின் தீராத குழப்பத்தில் மீண்டும் மீண்டும் போய் விழச்செய்யும் தாகத்தோடு. 

மூலம்: தாகூரின் “ தபால் அலுவலகம்” (ஆங்கில மூலம்) 

தமிழில்: சரவணன். கா.