Wednesday, 7 September 2022

ஆன்டன் செகாவின் “விரோதிகள்” (Enemies) சிறுகதையின் மொழிபெயர்ப்பு.


செப்டம்பர் மாதத்தின் ஓர் இருண்ட மாலை வேளையில் ஒன்பது மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் மாவட்ட மருத்துவரான கிரிலோவின் ஒரே மகனான ஆன்ட்ரே என்று அழைக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் டிஃப்தீரியா நோயுற்று இறந்து போயிருந்தான். மருத்துவரின் மனைவி துக்கம் மேலிட்டு தன்னுடைய முகத்தை முழங்கால்களுக்கு இடையில் புதைத்துக்கொண்டு பொங்கிக் கொண்டு வந்த சோகத்தில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில்தான் வாசல் கதவின் பக்கம் இருந்து நீடித்த மணியோசையொன்று கேட்டது. 

டிஃப்தீரியாவின் காரணமாக எல்லா வேலையாட்களும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி பணிக்கப்பட்டிருந்தார்கள். அவன் எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையில் அதாவது தன்னுடைய மேல்கோட்டுடனேயேஇடைக்கோட்டின் பொத்தான்கள் திறந்திருந்த நிலையில் தனது ஈரமான முகத்தைக்கூட துடைக்காமல் கார்பாலிக் அமிலத்தைக் கையாண்ட கைகளைக்கூட சுத்தம் செய்யாமல் கதவைத் திறப்பதற்காகச் சென்றான் கிரிலோவ். வாசற்பக்கம் ஒரே இருட்டாக இருந்தது. வந்திருந்த மனிதனின் பரிமாணத்தைப் தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இருட்டாக இருந்தது. அவன் நடுத்தரமான உயரத்தையும்வெள்ளை நிறத் துண்டு ஒன்றையும்நுழைவாயிலின் நடைபாதையை வெளிச்சமாக்குகின்ற அளவுக்கு மிகவும் வெளிறிப்போன பெரிய முகத்தையும் கொண்டிருந்தான் என்பது மட்டும் தெரிந்தது.

மருத்துவர் வீட்டில் இருக்கிறாரா?” என்று படபடப்புடன் கேட்டான் வந்த புதியவன். 

“ நான் வீட்டில்தான் இருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் கிரிலோவ். 

“ ஓ! அது நீங்கள்தானா! எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கூடிய குரலில் சொன்னான் வந்த புதிய மனிதன். அந்த இருட்டில் அவன் மருத்துவனின் கைகளைத் தேடிப்பற்றிக்கொண்டு அதனைத் தன்னுடைய கைகளுக்குள் வைத்து அழுத்தினான். “ நான் மிகவும்….மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நாம் இருவரும் நண்பர்களாகி விட்டோம். என்னுடைய பெயர் அபாஜின். உங்களைக் கடந்த கோடையில் நட்சேவின் வீட்டில் சந்தித்த பெருமை எனக்குண்டு. உங்களை உங்களுடைய வீட்டிலேயே சந்தித்ததில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் ஆணையாகதயவுசெய்து உடனே என்னுடன் வர மறுப்புச் சொல்ல வேண்டாம்… என்னுடைய மனைவிக்கு மிகவும் அபாயகரமாக உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது… வண்டி காத்திருக்கிறது.”

அவனுடைய குரலில் இருந்தும் அங்க அசைவுகளில் இருந்தும் அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. தீப்பிடித்து எரிகின்ற வீட்டைப்பார்த்தோ அல்லது வெறி நாயைப் பார்த்தோ திகிலடைந்த மனிதனைப்போல தன்னுடைய மூச்சிறைப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவனாய்நடுங்கியவனாய் வேக வேகமாக அவன் பேசினான். அவனுடைய குரலில் ஒரு கலப்படமில்லாத சிரத்தையும் குழந்தைத்தனமான எச்சரிக்கை உணர்வும் இருந்தன. பயத்தாலும் உணர்ச்சிப் பிரவாகத்தாலும் மூழ்கடிக்கப்பட்டவர்கள் பேசுவதைப்போல சுருக்கமாகவும் துள்ளலான வாக்கியங்களாகவும் தேவையேயில்லாத பொருத்தமே இல்லாத வார்த்தைகளை அவன் பேசிக்கொண்டிருந்தான். 

“ உங்களைப்பார்க்க முடியாமல் போய்விடுவேனோ என்று பயந்து கொண்டிருந்தேன்” என்று வந்தவன் சொல்லிக்கொண்டே போனான். “ நான் இங்கே வந்தபோது முற்றிலுமாக வேதனையுடன் இருந்தேன். கடவுளின் பெயரால் தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு என்னுடன் உடனே கிளம்பி வாருங்கள்…..இப்படித்தான் அது நிகழ்ந்தது. உங்களுக்கு அறிமுகமான அலெக்சாண்டர் செமியோனோவிட்ச் பாப்ட்சின்ஸ்கி என்னைப் பார்ப்பதற்காக வந்தான்….நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருப்போம்பிறகு தேநீர் அருந்துவதற்காக உட்கார்ந்தோம்திடீரென்று என் மனைவி தன்னுடைய நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அலறினாள். அப்படியே சேரில் மல்லாக்க வீழ்ந்துவிட்டாள். நாங்கள் அவளைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றோம்….. அம்மோனியாவைக் கொண்டு அவளுடைய நெற்றியை நான் நீவிவிட்டேன். அவள் மீது தண்ணீரையும் தெளித்தேன்…..அவள் என்னவோ செத்துப் போய்விட்டதைப் போல கிடந்தாள். அது அன்யூரிஸமாக இருக்குமோ என்று பயந்துபோய் விட்டேன்….சீக்கிரம் வாருங்கள்….அவளுடைய அப்பாவும்கூட அன்யூரிஸத்தால்தான் செத்துப்போனார்”

அவன் பேசுவதையெல்லாம் தனக்கு ரஷ்ய மொழி தெரியாததைப்போல கேட்டுக்கொண்டே இருந்தான் கிரிலோவ். ஒன்றுமே பதில் பேசவில்லை.

அபாஜின் மீண்டும் பாப்ட்சின்ஸ்கியைப் பற்றியும்அவனுடைய மனைவியின் தந்தையைப் பற்றியும் சொன்னான். மீண்டும் ஒருமுறை இருட்டில் அவனுடைய கையைத்தேடிப் பற்றிக் கொண்டான். மருத்துவர் கையைப் படக்கென்று உதறிக்கொண்டு அவனைப் பார்த்துப் பரிதாபமாக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்தெடுத்துச் சொன்னான்:

என்னை மன்னிக்கவும்…என்னால் வரமுடியாது…என் மகன் இறந்துவிட்டான்…ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான்….”

ஆ!..அது எப்படி முடியும்?…என்று ஓரடி பின்னே நகர்ந்து கொண்டு முணுமுணுத்துக் கொண்டான் அபாஜின். “அய்யோ கடவுளே! எந்த மாதிரியான அசந்தர்ப்பமான சூழ்நிலையில் நான் வந்து தொலைத்திருக்கிறேன்! அநியாயத்திற்கு சந்தோஷமே இல்லாத நாள் இது!…அநியாயத்திற்கு! எந்த மாதிரியான ஒருசேர நிகழ்ந்த நிகழ்வு பாருங்கள்!….ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் இப்படி நடந்துள்ளது போல தோன்றுகிறது!”

அபாஜின் கதவின் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு தன் தலையைத் தாழ்த்தினான். அப்படியே திரும்பிச் சென்றுவிடுவதா இல்லை மருத்துவரைக் கெஞ்சுவதைத் தொடர்வதா என்று அவன் தயங்கிக்கொண்டு இருப்பதும்மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதும் வெளிப்படையாகவே தெரிந்தன.

“ இங்கே பாருங்கள்” என்று அழுத்தமாகப் பேசத்தொடங்கினான் அவன். “தங்களுடைய நிலைமை எனக்கு நன்றாகப் புரிகிறது! இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் உங்களுடைய கவனத்தைத் திருப்ப நான் செய்யும் முயற்சிகளுக்காக எந்த அளவு வெட்கப்படுகிறேன் என்பதற்கு இறைவன்தான் சாட்சி. ஆனால் நான் என்ன செய்யட்டும்கொஞ்சம் இதைமட்டும் யோசித்துப்பாருங்கள்நான் வேறு யாரிடம் செல்ல முடியும்அக்கம்பக்கத்தில் வேறு எந்த மருத்துவரும் இல்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். கடவுளின் பெயரால் தயவுசெய்து வாருங்கள். நான் எனக்காக உங்களைக் கெஞ்சி நிற்கவில்லை. நோயாளி நான் அல்ல”

அதனைத் தொடர்ந்து ஓர் அமைதி நிலவியது. கிரிலோவ் தன் முதுகை அபாஜினுக்குக் காட்டிக்கொண்டு ஒரு கணம் அசையாமல் நின்றான்.

பின்னர் மெதுவாக வரவேற்பறைக்குள் நுழைந்தான். நிலையில்லாத இயந்திரகதியுடனான அவனுடைய நடையைப்பார்க்கும் போதும்வரவேற்பறையில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவனுடைய உருவம் ஏற்படுத்திய நேரான அடர்த்தியான நிழலை நோக்கும்போதும்மேசையின் மீது கிடந்த கனமான புத்தகம் ஒன்றை அவன் பார்த்த விதத்தில் இருந்தும் அவனுக்கு எந்தவிதமான நோக்கமோ எந்த ஒரு ஆசையுமோ இல்லாமல் எதைப்பற்றியும் நினைக்காதவனாய் இருக்கிறான் என்பது தெரிந்தது. அனேகமாக வாசலில் ஒரு அன்னியன் வந்திருக்கிறான் என்ற நினைவே அவனுக்கு இல்லை என்பதும் புலனாகியது. அந்த அறையில் நிலவிய மங்கிய மாலைவேளையின் வெளிச்சமும்அசைவற்ற நிலையும் அவனுடைய மரத்துப்போன உணர்வுகளை அதிகப்படுத்துவதாகவே தோன்றியது. வரவேற்பறையைவிட்டு அவன் தன்னுடைய வலதுகாலை தேவைக்கு அதிகமாகவே தூக்கி நடந்தான். கதவின் மரச்சட்டங்களைத் தன்னுடைய கைகளால் தடவி அறிந்தவாறு நடந்தான். அவன் அப்படி நடந்து செல்வதைப் பார்க்கிறபோது அவன் வேறு யாரோ ஒருவர் வீட்டில் நடமாடுகிறதைப்போன்று அவன் உருவம் குறித்த ஒரு குழப்பம் தெரிந்தது. அல்லது தன் வாழ்க்கையில் முதல் முறையாகக் குடித்துவிட்டு ஆச்சரியமான வகையில் தன்னை முற்றிலும் ஒரு புதுமையான உணர்வுக்குத் தாரை வார்த்துவிட்டதைப் போலவும் அது இருந்தது.

படிப்பறையின் சுவரில் இருந்த புத்தக அலமாரியின் மீது ஒரு பெரிய வெளிச்சக்கற்றைப் படிந்து வீழ்ந்து இருந்தது. அந்த ஒளிக்கற்றையுடன் சேர்ந்துகொண்டு கார்பாலிக் அமிலத்தின் கனமான வீச்சமும்ஈத்தரின் நாற்றமும் கதவில் இருந்து கொஞ்சம் திறந்திருந்த படுக்கையறை வரையும் கசிந்து  கொண்டிருந்தது…..மேசையின் முன்னால் இருந்த ஒரு சேரில் சென்று புதைந்து கொண்டார் மருத்துவர். ஒருவித மயக்கமான நிலையில் ஒரு நிமிடம் வெளிச்சம் படிந்துபோயிருந்த அவனுடைய புத்தகங்களைப் பார்த்தான். பின்னர் எழுந்து தன்னுடைய படுக்கையறைக்குள் போய்விட்டான்.

படுக்கையறையில் சாவினையொத்த நிசப்தம் ஆண்டுகொண்டிருந்தது. அங்கிருந்த எல்லாப்பொருட்களும்மிகச் சிறிய பொருட்களும் கூட சற்றுமுன் வீசிச்சென்ற புயல் ஒன்றின் பிரவாகத்தையும்அயர்ச்சியின் அடையாளத்தையும் தாங்கி நின்றன. அதே சமயம் அவையாவும் அமைதியாக ஓய்வான நிலையிலும் இருந்தன. பாட்டில்களுக்கும் பெட்டிகளுக்கும் பானைகளுக்கும் மத்தியில் ஒளிந்துகொண்டிருந்த ஒரு ஸ்டூலின் மேலே இருந்த மெழுகுவர்த்தி ஒன்றும்உட்பெட்டிகள் கொண்ட பெட்டியொன்றின் மேல் எரிந்து கொண்டிருந்த ஒரு பெரிய விளக்கும் அந்த அறை முழுவதும் அருமையான வெளிச்சத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தன. சன்னலுக்குக் கீழே இருந்த படுக்கையொன்றில் ஒரு சிறுவன் திறந்த கண்களுடனும்ஓர் அதிசயத்தைக் கண்ட ஆச்சரியத்தை முகத்தில் தாங்கியபடியும் படுத்துக்கிடந்தான். அவன் அசையவில்லைஆனால் ஒவ்வொரு கணப்பொழுதும் இருட்டித்துக் கொண்டு அவனுடைய தலைக்குள் ஆழமாகச் சென்று புதைந்துபோய்விட்டன் என்பதைப்போல அவனுடைய திறந்திருந்த கண்களைப் பார்க்கும்போது தோன்றியது. அவனுடைய உடலின் மீது தனது கைகளை வைத்தவாறு அவனுடைய தாய் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள். படுக்கை விரிப்புக்குள் அவளுடைய முகம் புதைந்துபோயிருந்தது. அந்தக்குழந்தையைப் போலவே அவளும் அசையாமல் இருந்தாள். துடித்துக்கொண்டிருந்த அவளுடைய உயிர் அவளுடைய உடல் வளைவுகளிலும் கைகளிலும் மட்டுமே தெரிந்தது. தன் உடல் முழுவதையும் அவள் அந்தக்கட்டிலின் மீது சாய்த்து இருந்தாள். இறுதியில் தன் களைத்த உடலுக்குக் கிடைத்த மன அமைதியையும்நிர்ச்சலனமான மன நிலையையும் தொந்தரவு செய்யப் பயப்படுபவளைப்போல தன் பலம் கொண்ட மட்டும் அதீத ஆசை மேலிட இறுக்கமாக அந்தக்கட்டிலுடன் ஒன்றிப்போய் கிடந்தாள். படுக்கை விரிப்புகள்போர்வைகள்கிண்ணங்கள்தரையில் சிதறிக்கிடந்த தண்ணீர்சிறு சிறு தூரிகைகள்அங்குமிங்கும் சிதறிக்காணபட்ட சிறு கரண்டிகள்எலுமிச்சைச் சாறு இருந்த ஒரு வெள்ளை நிற பாட்டில்கனமாகவும் மூச்சுத்திணறலையும் ஏற்படுத்திய அந்தக்காற்று —-எல்லாமே அமுக்கமாகவும்ஓய்வெடுக்க ஒடுங்கிவிட்டதைப் போன்றும் காணப்பட்டன. 

தனது பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்தவாறு தனது தலையை ஒரு பக்கம் சாய்த்து இறந்து கிடந்த தன் மகனை நிலைகுத்தியவாறு பார்த்தபடி தன் மனைவியின் அருகில் போய் நின்றார் மருத்துவர். எதையும் கண்டுகொள்ளாத ஒரு மனோபாவம் அவருடைய முகத்தில் வீற்றிருந்தது. அவனுடைய தாடியில் துளிர்த்திருந்த கண்ணீர்த்துளி அவன் சற்று நேரத்திற்கு முன்புதான் அழுது தீர்த்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டியது. சாவைப்பற்றிப் பேசும்போது ஏற்படுகின்ற ஒரு மனம் வெதும்பும் பயம் அந்த அறையில் இருந்து காணாமல் போயிருந்தது. எங்கும் வியாப்பிருந்த மரத்துப்போன தன்மைஅந்தத் தாயின் மன நிலைஎதையும் கண்டு கொள்ளாததைப்போல இருந்த டாக்டரின் முகம் யாவற்றிலும் மனதைக்கவரும்இதயத்தை வருடுகின்ற ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது. மிகவும் நுண்ணியஏறத்தாழ மனிதர்கள் நீண்ட காலமாகப் புரிந்து கொள்ளாதவிவரிக்க முடியாதஇசையால் மட்டுமே விவரிக்கப்பட முடிந்தநழுவிச் செல்லும் மனித துக்கத்தின் அழகுதான் அது. 

அங்கு நிலவிய கருமித்தனமான அசைவற்ற நிலையிலும் ஓர் அழகு இருந்துகொண்டுதானிருந்தது. கிரிலோவும் அவனுடைய மனைவியும் அமைதியாக இருந்தார்கள். அழவில்லை. அவர்கள் அறிந்திருந்த அவர்களின் இழப்பின் கசப்பையும் தாண்டிய அவர்களின் சோகத்தின் உண்மை நிலை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துதானிருந்தது. அதாவதுஒருகாலத்தில் அவர்களிடம் இருந்த அவர்களுடைய இளமை அவர்களைவிட்டுச் சென்றதைப்போலவே தற்போது அந்தப்பையனின் மரணத்துடன் தங்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியமும் சேர்ந்தே நிரந்தரமாகப் போய்விட்டதும் அவர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. மருத்துவருக்கு நாற்பத்து நான்கு வயதாகி இருந்தது. தலைமுடியெல்லாம் நரைத்துப்போய் ஒரு வயதானவரைப்போல அவர் காட்சியளித்தார். மங்கிப்போயிருந்த நோஞ்சான் போலிருந்த அவனுடைய மனைவிக்கு முப்பத்தைந்து வயது ஆகியிருந்தது. ஆன்ட்ரே அவர்களுடைய ஒரே குழந்தை மட்டுமல்லஅவர்களுடைய கடைசிக்குழந்தையும் கூட. 

அவனுடைய மனைவியைப்போலல்லாமல் மருத்துவர் ஆன்மத் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்—–தற்போது அங்கும் இங்கும் சுற்ற வேண்டும் என்ற ஏக்கத்தை உணர்ந்தார் அவர். அவருடைய மனைவியின் பக்கத்தில் ஐந்து நிமிடங்கள் நின்ற பிறகு அவர் நடக்க ஆரம்பித்தார்தனது வலது காலை உயரமாகத் தூக்கி நடந்தார். படுக்கையறையிலிருந்து பெரிய சோஃபா ஒன்று பாதி இடத்தை நிறைத்திருந்த சிறிய அறை ஒன்றுக்குள் நடந்து சென்றார்அங்கிருந்து சமையல் அறைக்குள் சென்றார். அடுப்புக்குப் பக்கத்திலும் சமையல்காரனின் படுக்கைக்குப் பக்கத்திலும் உலவிய பின்னர் ஒரு சிறிய கதவின் வழியாகக் குனிந்து நடந்தவாறு நடைக்குச் சென்றார். 

அங்கே மீண்டும் அவர் வெள்ளைத் துண்டையும் வெளிறிய முகத்தையும் கண்டார்.

“ கடைசியாக……” என்று பெருமூச்செறிந்துகொண்டே கதவுப்பிடிகளைப் பற்றிக்கொள்வதற்காக அதனை நோக்கி வந்தவாறே சொன்னான் அபாஜின். “ நாம் போகலாமா? ….தயவு செய்யுங்கள்….”

மருத்துவர் அவனை வெறித்து நோக்கியவாறு நினைத்துக் கொண்டார். “ என்ன சனியனடா இது!”. பின்னர் “ ஏன்என்னால் வரமுடியாது என்பதைத்தான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே” என்று கூறிக்கொண்டு மேலும் முகத்தைச் சுளித்தார் அவர். 

“ வைத்தியரேநான் ஒன்றும் கல் அல்ல…உங்களுடைய நிலை எனக்கு நன்றாகவே முழுமையாகப் புரிகிறது…..உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று தனது கைகளைத் தன் துண்டின்மீது வைத்துக்கொண்டு கெஞ்சலான குரலில் பேசினான் அபாஜின். “நான் எனக்காகக் கேட்கவில்லை…என்னுடைய மனைவி செத்துக்கொண்டிருக்கிறாள். நீங்கள் மட்டும் அவள் கத்துவதையும் அவள் முகத்தையும் பார்த்திருந்தால் என்னுடைய துயர நிலைமை உங்களுக்கும் புரிந்திருக்கும். என் பகவானே! நீங்கள் புறப்பட்டு வருவதற்குத்தான் உள்ளே சென்றீர்கள் என்றல்லவா நான் நினைத்தேன்! வைத்தியரைய்யா! நேரம் விலை மதிப்பற்றது. நாம் இப்போதே செல்ல வேண்டும். நான் உங்களைக்கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்”

என்னால் வர முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னான் கிரிலோவ். சொல்லிவிட்டு வரவேற்பறைக்குள் செல்ல அடியெடுத்து வைத்தான். அபாஜினும் அவரைத் தொடர்ந்து சென்றான். அவனுடைய சட்டையைப் பற்றிக்கொண்டான் 

“ நீங்கள் துயரத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் பல்வலியின் காரணமாகவோ வெறும் ஆலோசனைக்காகவோ நான் உங்களை வரச் சொல்லி வற்புறுத்தவில்லை. ஒரு மனித உயிரைக்காப்பதற்காக உங்களைக் கூப்பிடுகிறேன்” என்று ஒரு பிச்சைக்காரனைப்போல கெஞ்சிக்கொண்டே இருந்தான் அவன். “ தனிப்பட்ட துயரைக் காட்டிலும் மனித உயிர் என்பது முக்கியமான ஒன்றல்லவா! வாருங்கள்வீரத்திற்காகவும் நாயகத்திற்காகவும் உங்களைக்கேட்டுகொள்கிறேன். மொத்த மனித நேயம் பொருட்டும் உங்களை இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடைமறித்தார் கிரிலோவ். 

மனித நேயம் —அது இருவருக்குமே பொருத்தமானது” என்று எரிச்சல் மேலிடத் தொடர்ந்தார் கிரிலோவ். “அதே மனித நேயத்தால் நானும் கேட்கிறேன். என்னை வரச்சொல்லி வற்புறுத்தாதே. மேலும் எந்த அளவு வினோதமாக இது இருக்கிறது என்று பார். எனக்கு நிற்கக்கூடத் திராணியில்லை. நீயோ மனிதநேயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாய். தற்சமயம் நான் எதற்கும் லாயக்கில்லாதவன்….எதுவுமே என்னை வற்புறுத்த முடியாது. என்னுடைய மனைவியைத் தனியாக விட்டு விட்டு என்னால் வெளியே செல்ல முடியாது….இல்லை….இல்லவே இல்லை….முடியாது”

அப்படியே அங்கலாய்ப்பாய் கைகளை வீசிக்கொண்டு பின்னோக்கி நடந்தார் கிரிலோவ். 

“ மேலும்….மேலும் என்னை வற்புறுத்தாதே” என்று ஒரு எச்சரிக்கை கலந்த குரலில் பேசிக்கொண்டே போனார் அவர். “ என்னை மன்னித்துக்கொள்ளவும். விதி எண் பன்னிரண்டின் படி நான் உன்னோடு செல்வதற்குக் கடமைப்பட்டவன். எனது காலரைப் பற்றிக்கொண்டு தரதரவென்று என்னை இழுத்துப்போக உனக்கு உரிமை உண்டு….உனக்கு விருப்பமிருந்தால் அப்படி என்னை இழுத்துக்கொண்டு போ….ஆனால் நான் அப்படிச் செல்லக்கூடிய நிலையில் இல்லை….என்னால் பேசக்கூட முடியவில்லை…என்னை மன்னித்துக்கொள்”

“ இந்த மாதிரியான வேதனையான குரலில் என்னிடம் பேசாதீர்கள்” என்று மருத்துவரின் காலரைப்பற்றிக்கொண்டு பேசினான் அபாஜின். “ விதி பன்னிரண்டைப் பற்றி எனக்கென்ன கவலை வந்துவிட்டதுஉங்களுடைய விருப்பத்திற்கு மாறாக உங்களை வற்புறுத்த எனக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. உங்களுக்கு விருப்பமிருந்தால் வாருங்கள்இல்லாவிட்டால் —–இறைவன் உங்களை மன்னிக்கட்டும். ஆனால் நான் உங்களுடைய விருப்பத்தை நோக்கி இறைஞ்சவில்லை. உங்களுடைய உணர்வுகளை நோக்கி இறைஞ்சுகிறேன். இளம்பெண் ஒருத்தி இறந்துகொண்டிருக்கிறாள். நீங்கள் உங்கள் மகனின் இறப்பு குறித்து வருந்திக்கொண்டு இருக்கிறீர்கள். என்னுடைய துன்பத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் வேறு யாரால் புரிந்துகொள்ள முடியும்?”

திரும்பவும் அபாஜினின் குரல் உடைந்து உணர்ச்சிவசப்பட்டு நடுங்கியது. அந்த நடுக்கமும் குரலும் அவனுடைய வார்த்தைகளைக் காட்டிலும் மனதை ஊடுருவதாக இருந்தது. அபாஜின் பேசுவது உண்மையாகத்தான் தோன்றியது. ஆனால் அவன் பேசும்போதெல்லாம் அவனுடைய வார்த்தைகள் ஆதாரமற்றதைப் போலவும்உயிர்ப்பு இல்லாததைப்போலவும் பொருத்தமற்ற அலங்கார சொற்கள் நிறைந்ததாகவும்மருத்துவரின் வீட்டுக்குள் நிலவிய சோகமான சூழலின் மீதும் எங்கோ இறந்து கொண்டிருந்த பெண் ஒருத்தியின் மீது நடத்தப்பட்ட ஓர் அத்துமீறலாகவுமே அது பட்டது. அது அவனுக்கும் தெரிந்தே இருந்தது. எனவே தான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அவன் கவனமாக இருந்தான். தன்னால் இயன்றவரைக் குரலில் மென்மையையும் மிருதுத்தன்மையையும் குழைத்தே பேசினான். அப்போதுதான் வார்த்தைகள் அவனை ஏமாற்றினாலும் அவனுடைய குரலில் தெறிக்கும் நம்பகத்தன்மை அவனுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்பினான்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது அழகானஆழமான வார்த்தைகள் யாவும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பவனைத்தான் பாதிக்கின்றனவே தவிர சந்தோஷமாக இருப்பவனையோ மகிழ்ச்சி தொலைந்து நிற்பவனையோ அவ்வளவாகத் திருப்தி செய்வதில்லை. அதனால்தான் அனேக நேரங்களில் ஊமையாக இருந்துவிடுவதே அதிகபட்சமாக மகிழ்ச்சியையும்துக்கத்தையும் வெளிப்படுத்துகின்ற சாதனமாக அமைந்து விடுகிறது. ஒன்றுமே பேசிக்கொள்ளாத போதுதான் காதலர்கள் தங்களை நன்றாகப்புரிந்து கொள்கிறார்கள். மடையர்களின் ஆக்ரோஷமான வெறித்தனமான பேச்சு அன்னியர்களை மட்டுமே பாதிக்கிறது. விதவைக்கும்குழந்தைகளுக்கும் இறந்துபோன மனிதனுக்கும் அது குளிர்விட்டுப்போன அற்பமான ஒன்றுதான். 

கிரிலோவ் அமைதியாக நின்றார். ஒரு மருத்துவனை அழைப்பதில் இருக்கும் நியாய தர்மங்களையும்தியாகங்களையும் இன்னும் பல இத்யாதிகளைப் பற்றியும்ஏதோ இன்னும் சில வாக்கியங்களை அபாஜின் பேச முற்பட்டபோது, “அது எவ்வளவு தூரமிருக்கிறது?” என்று எரிச்சலுடன் கேட்டார் மருத்துவர். 

“ எட்டு ஒன்பது மைல்கள் இருக்கும்” என்னிடம் வாடகைக்குதிரைகள் இருக்கின்றன. வைத்தியரே! ஒரு மணி நேரத்தில் நான் உங்களைக் கொண்டுபோய் மீண்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்து விடுகிறேன். என் வார்த்தை மீது சத்தியம். ஒரே ஒரு மணி நேரம்தான்”

மனித நேயம் குறித்தமருத்துவரைக் கூப்பிடுவதன் உன்னத நோக்கம் குறித்த பிரஸ்தாபங்களை விட இந்த வார்த்தைகள் கிரிலோவை அசைத்தன. 

ஒரு கணம் யோசித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: மிகவும் நல்லது. நாம் போகலாம்”

தன்னுடைய படிப்பறைக்குள் உறுதியான காலடிகளுடன் வேகமாகச் சென்றார்.கொஞ்ச நேரம் கழித்து நீளமான ஒரு மேல்கோட்டுடன் வெளியே வந்தார். அபாஜின் பெரிதாக நிம்மதியடைந்தவாறு மருத்துவரைச் சுற்றிக் கைகளை வளைத்துப்பிடித்துகொண்டுஅவர் தனது கோட்டை அணிவதற்கு உதவினான். அவருடைய பாதங்களை உரசிக்கொண்டு அவனோடு வீட்டை விட்டு வெளியேறினான். 

வாசலில் கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் கதவுக்கு வெளியே இருட்டித்தான் இருந்தது. மருத்துவரின் உயரமானகூன் விழுந்த நெடிய உருவம் அவனுடைய நெடிய குறுகிய தாடியுடனும் கூரிய நாசியுடனும் அந்த இருட்டிலும் தனித்தே தெரிந்தது. அபாஜினின் பெரிய தலையும்அதனை அரைகுறையாக மூடியிருந்த சிறிய குல்லாவும் தெரிந்தன. அவனுடைய வெளிறிப்போன முகம் கூட தெரிந்தது. அவனுடைய துண்டின் முன்புறம் மட்டும் வெண்மையாகத் தெரிந்தது. அதன் பின்பக்கம் நீளமான தலைமுடியால் மறைக்கப்பட்டு இருந்தது.

“ என்னை நம்புங்கள்உங்கள் கருணையை எப்படிப் போற்றுவது என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று வண்டியில் ஏற மருத்துவருக்கு உதவியவாறு சொல்லிக்கொண்டான் அபாஜின். “ மிக விரைவிலேயே நாம் அங்குச் சென்று விடலாம். எந்த அளவுக்கு வேகமாகச் செல்ல முடியுமோ அந்த அளவு வேகமாகச் செல்லூகாப்ளீஸ்….’

வண்டிக்காரனும் துரிதமாகவே வண்டியை ஓட்டிச் சென்றான். மருத்துவமனை வளாகத்தை ஒட்டி நீண்டு நெளிந்து தெளிவில்லாமல் தெரிந்த கட்டிடங்கள் வரிசைக்கிரமத்தில் இருந்தன. வளாகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்த சன்னலில் இருந்து கசிந்து வேலியின் ஊடே ஊடுருவிக்கொண்டு வழிந்துகொண்டிருந்த வெளிச்சத்தைத் தவிர எங்கும் இருள் வியாப்பித்து இருந்தது. தன்னைச் சுற்றியிருந்த சூழலைக்காட்டிலும் மருத்துவமனையின் மேல்மாடித்தளங்கள் வெளிறியவைகளாகத்தான் தோன்றின. அதன் பின் அந்தக்கூண்டு வண்டி அடர்த்தியான நிழலுக்கு ஊடே ஊர்ந்து சென்றது. குளிர்வாடையின் வாசனையும்காளான்களின் வாசனையும்சலசலக்கும் மரங்களின் ஓசையும்தான் அங்கே இருந்தன. சக்கரங்களின் சத்தத்தைக் கேட்டுக் காய்ந்த சருகுகளுக்கு இடையே துள்ளி எழுந்த காக்கைக்கூட்டங்கள் மருத்துவரின் மகன் இறந்துவிட்டான் என்பதும் அபாஜினின் மனைவி சாகக்கிடக்கிறாள் என்பது தங்களுக்குத் தெரியும் என்பதைப்போல துக்கமான குரலில் கீச்சிட்டன. பிறகு தனியாக வளர்ந்திருந்த மரங்களும்புதர்களும்பெரிய நிழல்கள் உறங்கிக்கொண்டிருந்த மங்கிய ஒளியின் மினுப்பும் இருந்து கொண்டிருந்த பெரிய குளம் ஒன்றும் பார்வைக்கு வந்தன. -சமதளமாகப் பரப்பப் பட்டிருந்த தரையில் கூண்டு வண்டி ஊர்ந்துபோய்க்கொண்டிருந்தது. காகங்கள் கரைவது எங்கோ தொலைவில் மங்கலாகக் கேட்டது. விரைவில் அந்தச் சத்தமும் நின்றுவிட்டது.

கிரிலோவும் அபாஜினும் வரும் வழியெல்லாம் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர். ஒரே ஒரு முறை மட்டும் அபாஜின் ஆழமான பெருமூச்சொன்றை வெளியிட்டுக்கொண்டு சொன்னான்: 

“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”

ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின். 

கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ். “ நான் பிறகு உன்னிடன் வருகிறேன். கட்டாயம் ஒரு உதவியாளனை நான் என் மனைவிடம் அனுப்ப வேண்டும். அவள் தனியாக இருக்கிறாள். அது உனக்குத் தெரியும்.”

அபாஜின் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மணற்பாங்கான கரையின் மீது கற்களின் மேல் கரகரத்துக்கொண்டே அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக அசைந்து கொண்டு தன் வழியே வண்டி சென்றுகொண்டிருந்தது. கிரிலோவ் இருப்புக்கொள்ளாமல் நெளிந்து கொண்டிருந்தான். தன்னுடைய துன்பத்தைப் பார்த்தபோது அவனுக்கே பரிதாபமாக இருந்தது. நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அவர்களுக்குப் பின்னால் சாலை தெரிந்தது. ஆற்றின் ஓரத்தில் வளர்ந்திருந்த நாணற்புதர்கள் இருளுக்குள் சென்று மறைந்து கொண்டிருந்தன. வலதுபக்கம் சீருடையைப்போல ஒரே மாதிரியாகவும் வானத்தைப்போல பிரமாண்டமானதாகவும் சமவெளி ஒன்று காணப்பட்டது. தொலைவில் அங்கும் இங்குமாகஅனேகமாக பீட் சதுப்பு நிலங்களில் மங்கலான வெளிச்சத் துளிகள் மின்னிக்கொண்டிருந்தன. இடது பக்கமாகச் சாலையை ஒட்டியவாறு இணையாகப் புதர்களைக் குடுமிபோல வைத்திருந்த மலையொன்று ஓடிக்கொண்டிருந்தது. அதனுடைய உச்சிமேல் அசையாமல் பெரியதாகப் பாதியாகச் சிவந்து போயிருந்த நிலவு பனியால் கொஞ்சம் மறைக்கப்பட்டும்சிறு மேகக்கூட்டங்களால் சூழப்பட்டும் காட்சி தந்து கொண்டிருந்தது. எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அது அவ்விடத்தைவிட்டு நகராமல் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

அந்த இயற்கையின் அழகில் ஒரு நம்பிக்கையின்மையின் உணர்வும்வலியும் இருப்பதைப்போல இருந்தது. நாசமாக்கப்பட்ட பெண்ணொருத்தி இருட்டறைக்குள் தனது கடந்த காலத்தைப் பற்றி நினைக்க விரும்பாமல் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப்போல பூமியும் வசந்த காலத்தின் நினைவுகளையும்கோடையின் நினைவுகளையும் தாங்கியவாறு பரிதாபத்துக்குரிய வகையில் தவிர்க்கமுடியாதபடி வரப்போகின்ற குளிர்காலத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தது. ஒருவர் எல்லாத் திசைகளிலும் இருந்து பார்த்தாலும் இயற்கையானது ஒரு இருட்டானமுடிவே இல்லாத ஆழமானகுளிர்ச்சியான குழியைப்போலவும் அதிலிருந்து கிரிலோவோ அபாஜினோ பாதிச் சிவந்திருந்த நிலவோ தப்பித்துப் போக முடியாது என்பதைப் போலவும் இருந்தது.

வண்டி தன்னுடைய இலக்கை நெருங்க நெருங்க அபாஜினின் பதட்டம் அதிகமானது. இருப்புக்கொள்ளாமல் நகர்ந்து கொண்டிருந்தான். வண்டியோட்டுபவனின் தோளுக்கு மேல் எட்டி எட்டி பார்த்தான். ஒரு வழியாக இறுதியில் கோடுகள் போட்ட திரைச்சீலையால் நளினமாக மூடப்பட்டு இருந்த நுழைவாயில் ஒன்றின் முன்பாகச் சென்று வண்டி நின்றது. இரண்டாவது மாடியின் விளக்கேற்றப்பட்டிருந்த சன்னல்களை அவன் பார்த்த போது அவனுடைய மூச்சு சத்தத்தைத் தெளிவாகவே கேட்க முடிந்தது. 

ஏதேனும் நேர்ந்து விட்டால்….நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் மருத்துவரோடு ஹாலுக்குள் சென்றான். பதட்டம் காரணமாகத் தனது கைகளைத் துடைத்துக்கொண்டான். “ எந்தக் குழப்பமும் தென்படவில்லை…ஆக எல்லாம் இதுவரை நல்லபடியாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது “ என்று அங்கு நிலவிய நிசப்தத்தைக் கவனித்தவாறு சொன்னான் அவன். 

காலடிச் சத்தங்களோ குரலோசைகளோ அந்த ஹாலில் இல்லை. சன்னல்கள் வெளிச்சமாக இருந்தபோதினும் மொத்த வீடும் ஏதோ உறக்கத்தில் இருப்பதைப் போன்று தோன்றியது. இதுவரை இருட்டுக்குள் இருந்த மருத்துவரும் அபாஜினும் இப்போது ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். மருத்துவர் உயரமானவராகவும்லேசான கூன் விழுந்தவராகவும்அலங்கோலமாக உடையணிந்தவராகவும் பார்ப்பதற்கே அசிங்கமானவராகவும் தோற்றம் தந்தார். பார்க்கச் சகிக்காத ஒரு கொடூரமும்துயரமும்நட்பு பாராட்டாத தோற்றமும் அவனுடைய நீக்ரோக்களையொத்த தடிமனான உதட்டிலும் கூரிய மூக்கிலும்துயரமே வடிவான பரிதாபமான கண்களிலும் ஒட்டிக்கொண்டிருந்தன. அவருடைய வாரப்படாத தலையும்குழிந்து போயிருந்த நெற்றிப்பொட்டும்இளவயதிலேயே நரைத்துப்போயிருந்த அவருடைய நீளமானகுறுகியதாடை வெளியே தெரிந்த தாடியும்வெளிறிய சாம்பல் நிறத்தோலும்தான்தோன்றித் தனமான நாகரீகமற்ற பழக்க வழக்கங்களும்இவை எல்லாவற்றின் முரட்டுத்தனமான வெளிப்பாடும்— அவனுடைய பல வருட வறுமையையும்நலிந்த பொருளாதார நிலையையும்வாழ்க்கையோடும் மனிதர்களோடும் அவர் போராடியதால் ஏற்பட்ட களைப்பையும் பறைசாற்றிக்கொண்டிருந்தன. வற்றிப்போன அவருடைய உருவத்தைப் பார்த்தால் அவருக்கும் ஒரு மனைவி இருக்கிறாள்தன் குழந்தையின் பொருட்டு அவருக்கு அழத் தெரியும் என்று நம்புவதற்கு எவருக்குமே சிரமமாக இருக்கும். அபாஜின் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தான். 

அவன் நேர்த்தியானவனாகவும் பலசாலியானவனாகவும் மாநிறம் கொண்டவனாகவும் இருந்தான். பெரிய தலையும் பெரிய மென்மையான அங்கங்களையும் கொண்டிருந்தான். சமீபத்திய நடைமுறையில் இருந்த உடையை மிகவும் நளினமான முறையில் உடுத்தியிருந்தான். வண்டிக்குள் அவன் இருந்தபோது இறுக்கமாகப் போட்டிருந்த பொத்தான்களுடன் கூடிய கோட்டுஅவனுடைய நீளமான தலைமுடிஅவனுடைய முகம் எல்லாம் சேர்ந்து ஒருவித பெருமித உணர்வைசிங்கம் போன்ற உணர்வைத் தந்தன. அவன் தன் தலையை உயர்த்தி மார்பை நிமிர்த்தி நடந்தான். பேசும்போது கூட ஒரு உடன்பாடான இசையுடனேயே பேசினான். அவனுடைய துண்டை நீக்கி தலை முடியைக் கோதி வருடும்போது கூட அதில் ஒரு பண்பட்ட பெண்மையின் நளினத்தின் சாயல் தென்பட்டது. தன்னுடைய கோட்டை நீக்கிவிட்டு படிக்கட்டுகளை நோக்கியபோது இருந்த அவனுடைய வெளிறிய தோற்றமும்குழந்தைத்தனமான திகிலும் கூட அவனுடைய மதிப்பையோ அல்லது அவனுடைய உருவத்தை வெளிக்காட்டிய அவனுடைய நேர்த்தியையோஆரோக்கியத்தையோதன்னம்பிக்கையையோ குறைத்துவிட்டதாகத் தெரியவில்லை.

யாருமே இல்லை…எந்தச் சத்தமும் இல்லையே” என்று சொல்லிக்கொண்டே அவன் மாடிப்படிகளில் ஏறிச் சென்றான். “ எந்தக் குழப்பமும் இல்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறது”

ஹாலின் வழியாக அவன் மருத்துவரை ஒரு பெரிய வரவேற்பறைக்குள் அழைத்து வந்தான். அங்கே ஒரு கரிய நிறத்தில் ஒரு பியானோவும் வெண்ணிற உறையில் ஒரு சாண்டிலியரும் இருந்தன. அங்கிருந்து அவர்கள் இருவரும் மிகவும் கதகதப்பான ஒரு சிறிய அழகான மெல்லிய செந்நிறம் கசிந்து கொண்டிருந்த வரவேற்பறைக்குள் நுழைந்தார்கள்.

நல்லதுஇங்கே அமருங்கள் மருத்துவரே!…நான்…கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன். நான் சென்றுபார்த்து அவர்களைத் தயார் செய்து வருகிறேன்”

கிரிலோவ் தனித்து விடப்பட்டார். அந்த வரவேற்பறையின் ஆடம்பரமோ மங்கலாக அடங்கிப்போயிருந்த வெளிச்சமோ ஏதோ சாதனையைப் போலிருந்த முன்பின் அறிமுகமில்லாத ஒரு அன்னியன் ஒருவரின் வீட்டில் தான் இருக்க நேர்ந்த விதியோ அவரை எந்த ஒருவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர் ஒரு தாழ்ந்து இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கார்பாலிக் அமிலத்தால் வெந்து போயிருந்த தனது கைகளைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். பிரகாசமான சிவப்பு விளக்கையும் வயலின் உறையும் மட்டுமே கணப்போது அவனுடைய பார்வைக்குத் தெரிந்தன. கடிகாரம் ‘டிக்…டிக்’ சத்தம் செய்து கொண்டிருந்த திசையில் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். உடம்பு ஊதிய ஓநாய் ஒன்று அபாஜினைப் போல வலிமையானதாகவும் மெல்லியதாகவும் இருந்ததையும் அவர் பார்த்தார்.          

அங்கே அமைதி நிலவியது….எங்கோ பக்கத்திலிருந்த அறையில் தூரமாக யாரோ ஒருவர் பெரிய சத்தத்தில் கத்துவது அவருக்குக் கேட்டது.

ஆஹா!” கண்ணாடிக் கதவு மோதும் சத்தம் கேட்டது. அனேகமாக அது அலமாரியாக இருக்கக்கூடும். அதன் பின் மீண்டும் அமைதி நிலவியது. ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு கிரிலோவ் தன்னுடைய கைகளை ஆராய்வதை நிறுத்திவிட்டு அபாஜின் சென்று மறைந்த கதவை நோக்கித் தன்னுடைய கண்களை உயர்த்தினார்.

கதவுக்குப் பக்கத்தில் அபாஜின் நின்று கொண்டிருந்தான். ஆனால் சென்றபோது எப்படி இருந்தானோ அப்படி இல்லாமல் இருந்தான். மென்மையான தோற்றமும் பண்பட்ட நளினமும் காணாமல் போயிருந்தன- அவனுடைய முகம்அவனுடைய கைகள்அவனுடைய செய்கைகள் எல்லாமே ஏதோ பயங்கரத்திற்கும் துயரம் தரும் உடல் வேதனைக்கும் இடையில் தோன்றும் ஆத்திரவெளிப்பாட்டைத் உமிழ்ந்து கொண்டிருந்தன. அவனுடைய மூக்குஅவனுடைய உதடுகள்அவனுடைய மீசைஅவனுடைய எல்லா அங்கங்களும் துடித்துக்கொண்டு அவனுடைய முகத்தில் இருந்து வெளியே பிய்த்துக் கொண்டு வர முயற்சி செய்வதைப் போலத்தோன்றியது. அவனுடைய கண்கள் வேதனையில் சிரிப்பதைப் போலக் காணப்பட்டது.

அபாஜின் கனத்த இதயத்துடன் வரவேற்பறைக்குள் நடந்து சென்றான். முன்பக்கம் குனிந்து கொண்டு துக்கம் விசாரிப்பவனாகத் தன்னுடைய முஷ்டிகளை உதறிக்கொண்டான்.

அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்” என்று வினைச்சொல்லின் இரண்டாவது பகுதியில் அதிக அழுத்தம் தந்தவாறே கதறி அழுதான் அவன். “ என்னை ஏமாற்றிவிட்டாள். ஓடிப்போய்விட்டாள். அவள் நோயில் விழுந்ததும் என்னை மருத்துவரைப் பார்ப்பதற்காக அனுப்பியதும் அந்தக் கோமாளி பாப்ட்சின்ஸ்கியோடு ஓடிப்போவதற்குத்தானா! கடவுளே!”

அப்படியே அபாஜின் தளர்ந்துபோய் மருத்துவரை நோக்கி வந்தான். தன்னுடைய மெல்லிய வெண்ணிற முஷ்டிகளைக் கொண்டு முகத்தில் அறைந்துகொண்டே கதறிக்கொண்டிருந்தான். 

ஓடிப்போய்விட்டாள்! என்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய்விட்டாள்! ஆனால் எதற்காக இந்த ஏமாற்றுத்தனம்கடவுளே! கடவுளே! இந்த மாதிரியான மொள்ளமாரித்தனத்துக்கும்பொறுக்கித்தனமான தந்திரத்திற்கும்இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கும்இந்தப் பாம்பு வேலைக்கும் என்ன அவசியம் வந்ததுஅவளுக்கு நான் என்ன குறை வைத்தேன்ஓடிப்போய்விட்டாளே!”

அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. தனது காலடிகளை நகர்த்தி அந்த வரவேற்பறையின் குறுக்கும் நெடுக்குமாக நடைபயிலத் தொடங்கினான். இப்போது அவனுடைய குட்டையான கோட்டிலும்அவனுடைய கால்களைத் தேவைக்கும் அதிகமாக ஒல்லியாகக் காட்டிய அவன் அணிந்திருந்த நாகரீகமான குறுகிய காற்சட்டையிலும்அவனுடைய பெரிய தலையுடனும் நீண்டிருந்த பிடரியுடனும் அவன் உண்மையிலேயே பார்ப்பதற்குச் சிங்கம் போலத்தான் இருந்தான். மருத்துவரின் பரிதாபமான முகத்தில் ஒரு ஆர்வத்தின் மின்னல் தென்பட்டது. அவர் எழுந்து கொண்டார். அபாஜினைப் பார்த்துக் கேட்டார்: 

“ என்னை மன்னித்துக் கொள்ளவும்நோயாளி எங்கே?”

நோயாளி! நோயாளி!” என்று அபாஜின் அழுதான்பின்னர் சிரித்தான்பின்னர் அழுதான். இன்னும் தனது முஷ்டிகளை நெறுக்கிக் கொண்டிருந்தான். 

அவளுக்கு நோயொன்றும் கிடையாதுசபிக்கப்பட்டது மட்டும்தான்! மொள்ளமாரித்தனம்! வஞ்சகம்! இந்த மாதிரியான ஒரு தரங்கெட்ட செயலைச் செய்ய பிசாசு கூட கற்பனை செய்து பார்த்திருக்காது! அந்தக் கிறுக்குக் கோமாளியுடன்மந்த புத்தி கொண்ட நாயுடன்ஒரு அல்ஃபோன்சுடன் ஒடிப்போவதற்குத்தான் அவள் என்னை வெளியே அனுப்பி இருக்கிறாள். ஓ! கடவுளே! அவள் செத்துப் போயிருந்தால்கூட நன்றாக இருந்திருக்குமே! என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே! என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே!”

மருத்துவர் கொஞ்சம் நெருங்கி வந்தார். அவனுடைய கண்கள் வெறித்துப் பார்த்தன. அவை கண்ணீரால் பனித்திருந்தன. அவனுடைய தாடையுடன் சேர்ந்துகொண்டு அவனுடைய குறுந்தாடியும் இட வலமாக அசையத் தொடங்கியது.

இது எல்லாவற்றுக்கும் என்ன அர்த்தம் என்று நான் கேட்கலாமா?” என்று ஒரு ஆர்வ மிகுதியால் அவனைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு கேட்டார். “ என்னுடைய குழந்தை இறந்து விட்டான்அந்தப் பெரிய வீட்டில் என்னுடைய மனைவி தனியாகத் துயரத்தில் அமிழ்ந்து போய் கிடக்கிறாள். என்னால் நிற்பதற்குக் கூட முடியவில்லை. மூன்று இரவுகளாக நான் தூங்கவேயில்லை. ஆனால் இங்கே ஒரு வக்கிர நாடகத்தின் ஒரு பகுதியை நடித்துக் காட்ட நிர்ப்பந்தப் படுத்தப்பட்டிருக்கிறேன். ஒரு மேடை சொத்தின் பகுதியை நடித்துக் காட்ட! எனக்குப் புரியவில்லை. இது எனக்குப் புரியவே இல்லை” 

அபாஜின் தன்னுடைய ஒரு முஷ்டியைத் தளர்த்தினான். கசங்கிய தாள் ஒன்றை தரையில் வீசியெறிந்தான். அது ஏதோ ஒரு பூச்சியைப் போலவும் அதை நசுக்க எத்தனிப்பவனைப் போலவும் அதன் மீது ஏறி நின்றான். 

நானும் பார்க்கவில்லைஎனக்கும் புரியவில்லை” என்று நற நறவென்று கடித்துக்கொண்டிருந்த பற்களுக்கு ஊடே சொன்னான். அவனுடைய சோளக்கொள்ளைக்குள் யாரோ நுழைந்துவிட்டதைப் போல தனது முஷ்டியை முகத்துக்கு முன்னால் உயர்த்திக் காட்டிகொண்டிருந்தான். “அவன் தினமும் வந்ததை நானும் பார்க்கத் தவறிவிட்டேன்! இன்று கூட அவன் ஒரு மூடிய வண்டியில் வந்திருக்கிறான். அதையும்கூட நான் கவனிக்கவில்லை! எதற்காக அவன் மூடிய வண்டியில் வந்தான்நானும் அதைப் பார்க்காமல் போய்த்தொலைந்தேன்கர்மம்!”

எனக்கு ஒன்றும் புரியவில்லை…” என்று முணுமுணுத்துக்கொண்டான். மருத்துவன்ஏன்இந்தக் கருமாந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?  ஏன்இது தனிமனிதன் ஒருவனின் கண்ணியத்தின் மீதான அழிச்சாட்டியம்மனிதனின் துன்பத்தைக் கேலி செய்வது போலல்லவா இருக்கிறது! நம்பவே முடியாததாக அல்லவா இருக்கிறது!…என்னுடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போதுதான் இது மாதிரியான அனுபவம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது!”

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தான் மிகக் கொடூரமான முறையில் கேவலப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்ட ஒரு மனிதனின் சோர்வான ஆச்சரியத்துடன் மருத்துவர் தன்னுடைய தோள்களைக் குலுக்கிக் கொண்டார். தனது கரங்களை அகலமாக வீசிக்கொண்டு செய்வது என்னவென்று தெரியாமல் என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே நிராதவராக இருக்கையில் தொப்பென்று போய் விழுந்தான். 

“ நீ என்னை விரும்பாமல் இன்னொருவனை விரும்பியிருந்தால்—அப்படியே இருந்து விட்டுப்போயேன்டிஆனால் ஏன் இந்த ஏமாற்று வேலைஏன் இந்த வக்கிரப் புத்திகுள்ள நரித்தந்திரம்?” என்று கண்ணீரால் உடைந்த குரலில் புலம்பினான் அபாஜின். “ இதனுடைய நோக்கம் என்னஇதைப்போய் சரியென்று சொல்வதற்கு என்ன இருக்கிறதுநான் உனக்கு என்ன செய்துவிட்டேன்கேளுங்கள்மருத்துவரே!” என்று வெடுக்கென்று எழுந்துகொண்டு கிரிலோவிடம் சென்றான். “ என்னுடைய இந்த நிர்க்கதியான நிலைமையை நீங்கள் ஒரு அழையா விருந்தாளியாக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களிடம் இருந்து நான் உண்மையை மறைக்கப் போவதில்லை. சத்தியம் செய்து சொல்கிறேன். அந்தச் சிறுக்கியை நான் விரும்பினேன்உளமாறக் காதலித்தேன்ஒரு அடிமையைப் போலக் காதலித்தேன். அவளுக்காக எல்லவற்றையும் நான் தியாகம் செய்திருக்கிறேன். என்னுடைய சொந்த பந்தங்களோடு அவள் பொருட்டு நான் சண்டையிட்டு இருக்கிறேன். சேவையையும் இசையையும் கூட நான் ஒதுக்கி இருக்கிறேன். என்னுடைய சொந்த அம்மாவையும் சகோதரியையும் கூட மன்னிக்க முடியாத விஷயத்தில் அவளை நான் மன்னித்து இருக்கிறேன்…அவளை நான் ஆச்சரியமாகக் கூடப் பார்த்தது இல்லை…எந்த விஷயத்திற்காகவும் அவளை நான் மனம் வருந்தப் பேசியதில்லை. பிறகு ஏன் இந்த ஏமாற்றுத்தனம்நான் ஒன்றும் காதலை வேண்டவில்லையே! பிறகு ஏன் இந்தக் கீழ்த்தரமான இரட்டைவேடம்அவள் என்னைக் காதலிக்காவிட்டால் வெளிப்படையாகநேர்மையாக அதனை என்னிடம் சொல்லியிருக்கலாமே! இந்த விஷயத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதும் அவளுக்கும்தான் நன்றாகத் தெரியுமே”

கண்களில் கண்ணீருடன் உடலெங்கும் நடுக்கம் தொற்ற அபாஜின் தனது இதயத்தைத் திறந்து ஒரு முழுமையான விசனத்துடன் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தான். இதமாகவே பேசிக்கொண்டிருந்தான். தனது இரு கைகளையும் தன் இதயத்தின் மீது வைத்து எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை அவனுக்கு வெளிக்காட்டிகொண்டிருந்தான். இறுதியாக இனிமேல் அந்த ரகசியங்கள் எல்லாம் தனது இதயத்தைக் குத்திக்கிழிக்காது என்ற எண்ணம் கூட அவனுக்கு ஆறுதலைத் தந்தது. இந்த மாதிரி ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அவன் பேசிக்கொண்டிருந்தால்இதயத்தைத் திறந்து காட்டியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி அவனுக்கு ஆறுதல் கிடைத்துத்தான் இருக்கும். யாருக்குத் தெரியும்அந்த மருத்துவர் அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு நண்பனைப்போல் அவன் மேல் பச்சாதாபம் கொள்பவராக இருந்திருந்தால் ஒருவேளை இவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல்தேவையில்லாமல் கேலிக்கூத்தாக எதையாவது செய்து தொலைக்காமல் தன்னுடைய துன்பத்திற்கு ஒரு வடிகால் தேடியிருப்பான். ஆனால் நடந்ததோ அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அபாஜின் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்கனவே கோபமுற்றிருந்த மருத்துவர் கண்கூடாகவே வேறு மாதியாக மாறிப்போயிருந்தார். அவன் முகத்தில் தெரிந்த மேம்போக்கான எண்ணமும் ஆச்சரியமும் ஒரு கர்ண கடூரமான எதிர்ப்புணர்வாகவும்கோபமாகவும் அளவு கடந்த எரிச்சலாகவும் வெடித்தன. அவனது முகபாவம் இன்னும் கடுமையானதாகவும்முரட்டுத்தனமானதாகவும் இன்னும் பார்க்கவே சகிக்க முடியாததுமாகவும் மாறியிருந்தது. அவனுடைய கண்களுக்கு நேராக ஒரு கன்னியாஸ்திரியின் குளுமையையும் உணர்ச்சி வெளியே தெரியாத அழகிய முகத்தையும் கொண்ட ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை நீட்டி இந்த முகத்தைப் பார்த்தால் யாருக்காவது அது இரட்டை வேடம் போடும் முகம் என்று சொல்லத்தோன்றுமா என்று அபாஜின் கேட்டபோது மருத்துவர் அதை வெடுக்கென்று ஊதித் தள்ளியவாறு மின்னுகின்ற கண்களுடன் ஒவ்வொரு வார்த்தையையும் கோபக்கனல் தெறிக்க அளந்தெடுத்துப் பேசினார்:

எதற்காக இந்தக் கண்றாவியையெல்லாம் என்னிடம் சொல்லித் தொலைக்கிறாய்இதைக் கேட்பதற்கு எனக்கொன்றும் ஆர்வமில்லை! எனக்கு ஆர்வமே இல்லை!” என்று பலமாகக் கத்திக்கொண்டு தன் முஷ்டியால் மேசையின் மீது குத்தினார். “ உன்னுடைய வக்கிரமான ரகசியங்கள் எல்லாம் எனக்குத் தேவையில்லை! இந்தக் கழிசடையையெல்லாம் நீயே வைத்துக்கொள்! இந்த மாதிரியான கேவலங்களை எல்லாம் என்னிடம் இனிமேல் கூறாதே! இன்று ஏற்கனவே நான் போதுமான அளவில் கேவலப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்பது உனக்கு தெரிகிறதாஅதாவது எந்த ஒரு தடையும் இல்லாமல் நீ விரும்பும் போது வந்து கேவலப்படுத்தத் தகுதியான ஒரு மட்டமான புறம்போக்கு நான்! அப்படித்தானே?”

அபாஜின் ஸ்தம்பித்துப்போய் கிரிலோவிடம் இருந்து ஓரடி பின்னால் நகர்ந்தான். அப்படியே உறைந்து போனவனாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

என்னை நீ எதற்காக இங்கே அழைத்து வந்தாய்?” என்று தனது குறுந்தாடி துடிக்க கேட்டார் மருத்துவர். “நீ கொழுத்துப்போன வாழ்க்கையில் மிதந்துதிருமணம் செய்துபின்னர் இந்த மாதிரியான கிறுக்கு நாடகங்களை அரங்கேற்று. ஆனால் என்னைப்போய் எதற்காக இந்த ஈனத்தில் கொண்டுவந்து சேர்த்தாய்உன்னுடைய காதல் விவகாரங்கள் எல்லாம் எனக்கு எதற்குஎன்னை அமைதியில் இருக்க விடு! போ! உன்னுடைய கனவான்களுக்கே உரிய முறையில் போய் ஏழைகளைப் பிழிந்து பணத்தை உறிஞ்சு! பின் மனிதாபிமானம் பற்றிய கொள்கைகளைப் பார்வைக்காகப் பரப்புஇசை பழகு (மருத்துவர் ஒரு பக்கமாகப் பார்த்து வயலின் உறையைப் பார்த்தான்) பசூனும் ட்ராம்போனும் இசைத்துப்பார்கறிக்கோழி போல கொழுத்துச் செழிஆனால் தனிமனித கண்ணியத்தை மட்டும் கேவலப் படுத்தத் துணியாதே! உனக்கு அதற்கு மதிப்பளிக்கத் தெரியவில்லையென்றால் குறைந்தபட்சம் அதை உன்னுடைய கவனத்திலாவது வைத்துக்கொள்!”

என்னை மன்னிக்கவும்இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று முகம் சிவந்தவனாய் கேட்டான் அபாஜின்.

இதற்கு அர்த்தம் என்னவென்றால் உன்னை மாதிரியான ஆட்களுடன் பேசுவதே கேவலம்தரமில்லாத செயல் என்பதுதான்! நான் ஒரு மருத்துவர். மருத்துவர்களையும்பொதுவாக வாசனைத்திரவியங்களும் விபச்சாரமும் மணக்காத உழைக்கும் மனிதர்களையும்  எடுபிடிகளைப்போலவும் படிக்காத முட்டாள்களைப்போலவும் நீ கருதுகிறாய்நல்லது: அப்படியே கருதிவிட்டுப்போஆனால்  துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை ஒரு பொதுச் சொத்தைப் போல நடத்துவதற்கு உனக்கு யாரும் உரிமை தரவில்லை”

இப்படியெல்லாம் என்னிடம் பேச உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று அமைதியாக்ச் சொன்னான் அபாஜின். மறுபடியும் அவனுடைய முகம் நடனமாடத் தொடங்கியது. இந்த முறை சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் ரௌத்திரம்தான் அதற்குக் காரணமாக இருந்தது.

இல்லையடாஉனக்குத்தான் எவ்வளவு தைரியம்என்னுடைய துன்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டே இந்தக் கருமாந்திரத்தையெல்லாம் பார்க்க வேண்டி நீதானே என்னை இங்கே அழைத்து வந்தாய்?” என்று பதிலுக்குக் கத்தினார் மருத்துவர். தனது முஷ்டியால் மீண்டும் மேசையின் மீது ஓங்கிக் குத்தினார். “ இன்னொரு மனிதனின் துயரத்தைக் கேலிக்கூத்தாக்க உனக்கு யார் உரிமை தந்தது?”

நீ புத்தி பேதலித்துப் போய்விட்டாய்,” என்று சத்தம் போட்டான் அபாஜின். “இது இரக்கமே இல்லாதது. நானே ஆழ்ந்த துன்பத்தில் இருக்கிறேன்…மேலும்…”

துன்பம்” என்று ஒரு இகழ்ச்சிப் புன்னகையுடன் சொன்னார் மருத்துவர். “அந்த வார்த்தையை நீ உச்சரிக்காதேஅதற்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை. கடன் கிடைக்காதபோது ஒரு ஊதாரி கூட துன்பத்தில் இருப்பதாகத்தான் சொல்வான். கறிக்கோழிதின்று கொழுத்ததால் உண்டான சோம்பேறித்தனத்தால் கூட துன்பத்தில்தான் இருக்கிறது போலும். கழிசடைக் கூட்டம்!”

ஐயாநீங்கள் உங்களை மறந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சீறினான் அபாஜின். “ இந்த மாதிரி பேசுவதனாலேயே பல பேர் அடி வாங்கியிருக்கிறார்கள்! அது உங்களுக்குத் தெரியுமா?”

அபாஜின் அவசர அவசரமாக தனது பக்கவாட்டுப் பையைத் தடவிப்பார்த்து ஒரு கையேட்டை வெளியே எடுத்தான். அதிலிருந்து இரண்டு நோட்டுகளை வெளியே எடுத்து அதனை மேசையின் மீது வீசியெறிந்தான். 

இந்தாநீ வந்து பார்த்ததற்கான ஃபீஸ்” என்று மூக்குத் துவாரங்கள் விடைக்கச் சொன்னான். “உனக்கு பணம் பட்டுவாடா ஆகிவிட்டது” என்றான்.

எனக்குப் பணம் தர உனக்கு எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும்?” என்று உறுமிக்கொண்டே அந்தப் பணத்தை மேசையிலிருந்து தள்ளி தரையில் வீசியெறிந்தார் மருத்துவர். “ஒரு அவமானத்தை வெறும் பணத்தால் நிவர்த்தி செய்ய முடியாது” என்று கூவினார். 

அபாஜினும் மருத்துவரும் நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோபத்தில் கொந்தளித்தவாறே ஒருவரைப் பார்த்து ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய வாழ்வில்உச்சபட்ச மனச்சிதிலத்தின் போதுகூட அவர்கள் இந்த மாதிரியான நாகரீகமற்றகொடூரமானகிறுக்குத்தனமான வார்த்தைகளைப் பிரயோகம் செய்திருக்க மாட்டார்கள். மகிழ்ச்சி தொலைந்ததனால் ஏற்பட்டிருந்த சுயகழிவிரக்கம் இருவரிடமும் வெளிப்படையாகவே காணப்பட்டது. சந்தோஷமில்லாத மனிதர்கள் யாருமே கழிவிரக்கம் கொண்டவர்களாகவும்வெறுப்பு மிக்கவர்களாகவும்அநீதி இழைப்பவர்களாகவும்கொடுங்கோலர்களாகவும்ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் மூடர்களை விடவும் கேவலமானவர்களாகவும் இருக்கிறார்கள். மகிழ்ச்சியின்மை என்பது மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களைப் பிரித்து விடுகிறது. மேலும் தன்னுடைய துன்பமும்பெரிய அளவில் இழைக்கப்பட்ட அநீதியும் தங்களுக்கும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களும் தன்னுடன் இணைய வேண்டும் என்று ஒருவன் கற்பனை செய்யும்போதுதான் சராசரி சூழ்நிலையிலிருந்து வேறுபட்ட ஒரு கொடூரம் அங்கே உருவாக்கப்பட்டு விடுகிறது. 

“ தயவு செய்து நான் வீட்டுக்குச் செல்லட்டுமாஎன்று மூச்சிரைத்துக்கொண்டே கேட்டார் மருத்துவர். 

அபாஜின் மணியை அடித்தான். யாரும் பதிலளிக்க வராமல் இருந்ததால் மணியை மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தான். பின்னர் கோபமாக அதனைத் தரையில் விட்டெறிந்தான். அது கம்பளி விரிப்பின் மீது ஒரு அமுத்தலான சத்தத்துடன் விழுந்து சாவின் விளிம்பில் நிற்பதைப் போன்ற ஒரு துயரமான இசையை எழுப்பியது. வேலையாள் உள்ளே வந்தான். 

எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தாய்பேய் உன்னை சாப்பிடட்டும்” என்று அவனுடைய முதலாளி தன் முஷ்டிகளை மடித்துக்கொண்டு அவனை நோக்கி எகிறிக் குதித்தான். “கொஞ்ச நேரத்திற்கு முன்னால் எங்கே போய் தொலைந்தாய்போய் இந்தக் கனவானுக்கென்று ஒரு விக்டோரியாவையும்எனக்கு ஒரு மூடப்பட்ட வண்டியையும் தயார் செய்யும் படி சொல். வேலையாள் செல்ல எத்தனித்தபோது “நில்” என்று அவனைப் பார்த்துக் கத்தினான். “நாளைக் காலையில் எந்த ஒரு துரோகியும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. எல்லோரும் எங்காவது போய்த் தொலையுங்கள். புதிய வேலையாட்களை நான் அழைத்துக்கொள்கிறேன்! பரதேசிகள்!”

அபாஜினும் மருத்துவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். முதலாமவன் தன்னுடைய நாகரீகமான தோற்றத்தையும் பண்பட்ட நளினத்தையும் மீண்டும் பெற்றான். அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். தலையை நாசூக்காக அசைத்துக்கொண்டான். எதையோ பற்றி  அவன் தியானம் செய்தது போலிருந்தது. அவனுடைய கோபம் தணியவில்லை. ஆனால் தன்னுடைய விரோதியைத் தான் பார்க்கவில்லை என்று தோன்றும்படி முயன்று கொண்டிருந்தான். நன்கு ஊற்றி வளர்க்கப்பட்ட போஷாக்குடனும் வசதியுடனும் வளர்ந்த ஒருவனைப் பார்த்து இன்னொருவன் முரண்படும்போது வருத்தமும் கோபமும் கலந்து கண்களில் பளிச்சிடும். அந்த மாதிரியான கண்களில் மட்டுமே தென்படுகின்ற கேலி கலந்த அசிங்கமான வெறுப்புணர்வுடன் மருத்துவர் தன்னுடைய ஒரு கையை மேசையின் மீது ஊன்றிக்கொண்டு அபாஜினைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்திற்குப்பிறகு மருத்துவர் விக்டோரியாவில் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்திக்கொண்டு சென்ற பின்னரும்கூட அவனுடைய கண்களில் இன்னும் வெறுப்பின் சாயல் இருந்து கொண்டுதானிருந்தது. இருட்டாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இருந்ததைக் காட்டிலும் அதிகமான இருட்டாக இருந்தது. பாதியாகச் சிவந்திருந்த நிலவு மலைக்குப் பின்னால் சென்று மறைந்திருந்தது. அதனைக் காவல் காத்து நின்ற மேகக் கூட்டங்கள் நட்சத்திரங்களுக்கு அருகில் கருந்திட்டுகளாய் விரவிக் கிடந்தன. சிவப்பு விளக்குகளுடன் இருந்த கூட்டு வண்டியும் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரமே அது மருத்துவரை முந்திவிட்டது. தனது வெறுப்பைக் காட்டுவதற்காகவே அபாஜின் அப்படி ஓட்டிச் சென்றான். அபத்தமான காரியங்கள் செய்வதற்காக அப்படி ஓட்டிச்சென்றான்.

வழி நெடுக மருத்துவர் தன்னுடைய மனைவியைப் பற்றியோஅவனுடைய ஆன்ட்ரேயைப் பற்றியோ நினைக்கவில்லை. மாறாகத் தான் சற்று முன்பு விட்டு விட்டு வந்த அபாஜினையும் அங்கிருந்த மக்களையும் பற்றி எண்ணிக்கொண்டு வந்தார். அவருடைய எண்ண ஓட்டங்கள் அநீதி இழைக்கும் ஒன்றைப் போன்றும்மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட கொடுமையைப் போன்றும் இருந்தன. அபாஜினையும்அவனுடைய மனைவியையும்பாப்ட்சின்ஸ்கியையும்மெல்லிய சொகுசானமங்கிய செவ்வொளியில்இனிய வாசனைத் திரவியங்களுடன் வாழும் எல்லோரையும் அவர் வெறுத்துக் காறி உமிழ்ந்தார். வீட்டை அடையும் முன்பாக வழி தோறும் அவர்களையெல்லாம் தன் தலை வலிக்கும் வரை வெறுத்து ஒதுக்கினார். அவனுடைய மனதில் அவர்களைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு வடிவம் பெற்றிருந்தது. 

காலம் கடந்து விடும்கிரிலோவின் துன்பமும் மறைந்து விடும். ஆனால் நீதிக்குப் புறம்பானமனித இதயத்திற்கு ஒவ்வாத அவனுடைய தீர்க்கமான முடிவு மட்டும் என்றைக்கும் மறையாது. கல்லறைக்குச் செல்லும் காலம் வரும்வரையிலும் அது அவனுடைய மனதில் நிலைத்து நின்று கொண்டே இருக்கும்.   

மூலம்செகாவின் “Enemies” என்ற சிறுகதை (ஆங்கிலம் வழியாக

தமிழில்சரவணன். கா   

இந்த மொழிபெயர்ப்பு “சொல்வனம்” இணைய இதழில் 28.11.2021 அன்று பிரசுரமானது.