Showing posts with label Sadat Hassan Manto. Show all posts
Showing posts with label Sadat Hassan Manto. Show all posts

Tuesday, 24 December 2024

ஜன்னலைத் திற by Sadat Hassan Manto

 


This is a Tamil translation of famous Pakistan writer Sadat Hassan Manto’s short story “Khol Do” (Translated into English by C Christine Fair. The English translation has been published in The Punch Magazine)  

மதியம் 2 மணிக்கு அமிர்தசரஸில் இருந்து ஒரு சிறப்பு ரயில் புறப்பட்டு எட்டு மணி நேரத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணத்தின் போது ​​பல ஆண்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர், வேறு சிலர் திக்கு தெரியாமல் பல்வேறு திசைகளில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். .  

காலை பத்து மணி ஆகிவிட்டது...முகாமின் குளிர்ந்து போயிருந்த தரையில் கிடந்த சிராஜுதீன் கண்களைத் திறந்து பார்த்தான். ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலவரமான முகத்துடன் அவனைச் சூழ்ந்து கொண்டு நின்றிருந்தனர். என்ன நடக்கிறது என்பதை சிந்திக்கும் திறனும், நடப்பவற்றைப் புரிந்து கொள்ளும் திறனும் குறைந்து விட்டதைப் போலிருந்தது. சிறிது நேரம் கலங்கிப்போயிருந்த வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முகாம் முழுவதும் பரபரப்பு நிலவியது. ஆனால் வயதான சிராஜுதீனின் காதுகள் அதையெல்லாம் கேட்காதபடி எப்போதோ மூடிக்கொண்டு விட்டன. அவனால் எதையும் கேட்க முடியவில்லை. யாராவது பார்த்தால், அவன் ஏதோ  ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டதாகத்தான் நினைத்துக் கொள்வார்கள். அவர்கள் அப்படி நினைப்பதும் தவறுதான். அவன் புலன்கள்தான் மரத்துப் போயிருந்தன. அவனுடையது சகலமும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது.   

இருண்ட போயிருந்த வானத்தை நோக்கி நிலைத்திருந்த அவனுடைய கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்த சூரியன் மீது எதேச்சையாக தடுமாற்றத்துடன் விழுந்தன.  சூரியனின் கடுமையான ஒளிக்கதிர்கள் அவனது சகலத்தின் ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவி..  அவனுக்கு நினைவு திரும்பியது. கலவரத்தின் கொடூரம் மனதுக்குள் படமாக ஓடியது. கொள்ளை... தீ... நிலை கொள்ளாமல் அங்கும் இங்குமாக ஓடியதுரயில் நிலையம்... தோட்டாக்கள்... இரவு நேரம்அருகில் சகினா. சிராஜுதீன் திடீரென்று எழுந்து கொண்டான்; ஒரு பைத்தியக்காரனைப் போல தன்னைச் சுற்றி பரவியிருந்த மனிதக் கடலுக்குள் நுழைந்து எதையோ தேடியலையத் தொடங்கினான்.  

முழுமையாக மூன்று மணி நேரம், சகினா! சகினா!என்று அரற்றிக்கொண்டே முகாம் முழுதும் சல்லடை போட்டுத் தேடினான். ஆனால் அவனால் தனது ஒரே மகளின், அந்த சிறுவயதுப் பெண்ணின் ஒரு தடயத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவனைச் சுற்றிலும் ஒருவித பைத்தியக்காரத்தனம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவன் தன் மகனையும், இன்னொருவன் தன் தாயையும், இன்னொருவன் தன் மனைவியையும், மற்றொருவன் தன் மகளையும் தேடிக் கொண்டிருந்தார்கள். களைத்துப்போய் முயற்சியில் தோல்வியுற்றவனாக ஒரு ஓரமாக அமர்ந்து அவனும் சகினாவும் எப்போது, ​​எந்த இடத்தில் பிரிந்தார்கள் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தான். அவனுடைய மனம் சகினாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோதும் அவனது கவனம் குடல் சரிந்த நிலையில் கீழே கிடந்த சகீனாவின் தாயின் சடலத்தின் மீது திரும்பியது. அதற்கு மேல் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.  

சகீனாவின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டாள். சிராஜுதீனின் கண் முன்னே அவள் தன் கடைசி மூச்சை விட்டிருந்தாள். இறக்கும் தறுவாயிலும் சகினா எங்கே, என்னை விட்டுவிடு! சகினாவை அழைத்துக்கொண்டு இங்கிருந்து ஓடிவிடு.என்று சிராஜுதீனை கேட்டவண்ணம் இறந்து போனாள்.   

அவள் அப்படி சொன்னபோது அவனுடன் சகீனா இருந்தாள். இருவரும் வெறுங்காலுடன் தப்பி ஓடினர். சகினாவின் துப்பட்டா கீழே சரிந்தது. அவர் நிறுத்தி துப்பட்டாவை எடுக்க விரும்பினான்.  ஆனால் சகினா அவரை நோக்கி கத்தினாள், "அப்பா... அதை விடு..." ஆனாலும் அவன் அந்தத் துப்பட்டாவை எடுத்தான். இவை அனைத்தும் அவன் மனத்திரைக்குள் ஓடியது. சட்டைப் பையைத் தடவிப் பார்த்தான். அது வீங்கிப்போனதைப் போலிருந்தது.  சட்டைப் பைக்குள் கையை விட்டு உள்ளேயிருந்த துணியை வெளியே எடுத்தான். அது சகினாவின் துப்பட்டாதான். ...ஆனால் சகினா எங்கே? 

சோர்வுற்ற மூளையை மீண்டும் மீண்டும் கசக்கி நினைவுபடுத்த முயன்றான் சிராஜுதீன். எதுவும் நினைவுக்கு வரவில்லை. சகினாவை அவன் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தானா?... அவள் அவனுடன் ரயிலில் ஏறினாளா?... இடையில் ரயில் வழி மறிக்கப்பட்டபோதும், ​​கிளர்ச்சியாளர்கள் ரயிலுக்குள் நுழைந்து சகினாவை இழுத்துக்கொண்டு தலைமறைவான போதும் அவன் மயக்கமுற்று கிடந்தானா? சிராஜுதீனின் மூளைக்குள் இப்படி பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. எதற்கும் அவனிடம் பதில் இல்லை. சிராஜுதீனுக்கு ஆறுதல் சொல்ல ஒருவர் தேவைப்பட்டது.  ஆனால் அவரைச் சுற்றி சிதறிக் கிடந்த மற்ற அனைவருக்கும் அதுதான் தேவையாக இருந்தது. அவன் அழ விரும்பினான் ஆனால் அவன் கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. அவன் கண்ணீர் எங்கே போனது?

 ஆறு நாட்களுக்குப் பிறகு சிராஜுதீனுக்குக் கொஞ்சம் நினைவு திரும்பியது. , ​​அவனுக்கு உதவத் தயாராக இருந்த சிலரைச் சந்தித்தான். அவர்கள் மொத்தம் எட்டு இளைஞர்கள். அவர்களிடம் லாரியும் துப்பாக்கிகளும் இருந்தன. அவர்களுக்கு மனம் நிறைந்து வழியும் அளவுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு சகினாவின் தோற்றத்தை அவர்களிடம் விவரித்தான். “அவள் சிகப்பு நிறமுள்ளவள், மிக மிக அழகானவள. அவளுக்குத் தன் அப்பாவை விடவும் அம்மாவைத்தான் அதிகமாகப் பிடிக்கும். அவளுக்கு சுமார் 17 வயது இருக்கும்... அவள் கண்கள் பெரியவை.... அவளுடைய தலைமுடி கருப்பு. அவளது வலது கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் ...அவள் என் ஒரே மகள். அவளை கண்டுபிடியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்என்றெல்லாம் பிதற்றினான். 

அந்த இளம் ஆண் தன்னார்வலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வயதான சிராஜுதீனை சமாதானப்படுத்தினர். அவனது மகள் உயிருடன் இருந்தால், சில நாட்களில் அவர்கள் அவளைக் கண்டுபிடித்து அவனிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகச் சொல்லி சென்றார்கள்.   

எட்டு இளைஞர்களும் தங்களால் ஆனமட்டும் முயன்றனர். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமிர்தசரஸ் வரை சென்றார்கள். பல்வேறு இடங்களில் இருந்த பெண்களையும், ஆண்களையும் குழந்தைகளையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பத்து நாட்கள் கடந்தும், அவர்களால் சகினாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  

ஒரு நாள், அவர்கள் அதே தன்னார்வப் பணிக்காக அமிர்தசரஸை நோக்கி லாரியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​செஹ்ராட்டாவுக்கு அருகில், சாலையில் ஒரு பெண்ணைக் கண்டார்கள். லாரியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அந்தப் பெண் ஓட ஆரம்பித்தாள். தன்னார்வலர்கள் வண்டியை நிறுத்தினார்கள். ஒவ்வொருவரும் அவளைப் பின்தொடர்ந்து ஒடினார்கள்.  அவர்கள் அவளை அப்படியே அள்ளிக்கொண்டு வயலுக்குள் இழுத்துச் சென்றனர். அவள் மிகவும் அழகாக இருந்தாள். அவளுடைய வலது கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தது. இளைஞர்களில் ஒருவன் அந்த பெண்ணிடம், “பயப்பட வேண்டிய அவசியமில்லை…! உன் பெயர் சகினாதானே...?" என்று கேட்டான். 

அதைக் கேட்டதும் அந்த பெண்ணின் முகம் இன்னும் வெளிறியது. அவள் பதில் பேசவில்லை. இளைஞர்கள் அனைவரும் தொடர்ந்து  ஆறுதலாகப் பேசியபோது ​​​அவளின் பயம் கொஞ்சம் விலகத் தொடங்கியது.  தான் சிராஜுதீனின் மகள்தான் என்று ஒப்புக்கொண்டாள். 

எட்டு இளைஞர்களும் அவளுடைய பயம் விலக தங்களால் ஆன எல்லாவற்றையும் முயற்சித்தார்கள். அவளுக்கு உணவளித்தனர். அவர்கள் குடிப்பதற்கு பால் தந்தனர். பின்னர் அவர்கள் அவளை லாரியில் அமர வைத்தனர். அவர்களில் ஒருவன் தன் மேலங்கியைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அவளிடம் துப்பட்டா இல்லாததால், அவள் மிகவும் சங்கோஜப்பட்டாள். கைகளால் தனது மார்பை மீண்டும் மீண்டும் மறைக்க முயன்று கொண்டிருந்தாள். 

நாட்கள் பல கடந்தன... சகினாவைப் பற்றி எந்தத் தகவலும் சிராஜுதீனுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு அலுவலகங்களுக்கும் முகாம்களுக்கும் சென்று விசாரித்தான். எங்கு சென்றாலும் சகினா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாலையும் வெகுநேரம் வரை அவர் தனது மகள் உயிருடன் இருந்தால் சில நாட்களில் அவளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதாக உறுதியளித்து சென்ற அந்த இளம் தன்னார்வலர்கள் தங்கள் முயற்சியில் வெற்றியடைய பிரார்த்தனை செய்வான். 

ஒரு நாள் அந்த இளைஞர்களை முகாம் ஒன்றில் சிராஜுதீன் பார்த்தான். அவர்கள் அனைவரும் லாரியில் அமர்ந்திருந்தனர். அவர்களைச் சந்திக்க வேண்டி  அவர்களை நோக்கி சிராஜுதீன் ஓடினான். அவர்களைப் பார்த்துமகனே!... என் மகள் சகினாவைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா..?” என்று கேட்டபோது அவர்கள் வந்த லாரி கிளம்பத் தயாராக இருந்தது. 

அனைவரும் ஒரே குரலில் "சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம்வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம்என்று கத்தினார்கள். பின்னர் வண்டியை ஓட்டிச் சென்றுவிட்டார்கள். மீண்டும் ஒருமுறை சிராஜுதீன் இந்த இளைஞர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்தான். ஒரு விதமாக அவனது மனம் இலகுவானது.  

அன்று மாலை சிராஜுதீன் அமர்ந்திருந்த முகாமில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. நான்கு பேர் முகாமுக்குள் எதையோ தூக்கிக்கொண்டு சென்றனர். விசாரித்துப் பார்த்ததில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததாக சிராஜுதீன் அறிந்தான். சிலர் அவளை முகாமிற்குள் கொண்டு சென்றார்கள். சிராஜுதீன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்கள் சிறுமியை மருத்துவமனை ஊழியர்களிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்கள். 

சிறிது நேரம் மருத்துவமனைக்கு வெளியே இருந்த மரத்தூணில் சாய்ந்த வண்ணம் சிராஜுதீன் நின்று கொண்டிருந்தான். பிறகு, மெதுவாக உள்ளே நுழைந்தான். அறையில் யாரும் இல்லை. அங்கே ஒரு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தது. அதில் சடலம் ஒன்று கிடத்தப்பட்டு இருந்தது. சிராஜுதீன் மிகச்சிறிய அடிகளை எடுத்து வைத்து சடலத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தான். திடீரென்று அறை முழுவதும் விளக்குகள் ஒளிர்ந்தன.  சடலத்தின் மங்கிப்போன முகத்தில் பளபளப்பான மச்சத்தைப் பார்த்ததும் தொண்டை கிழிய அலறினான் சிராஜுதீன். 

"சகினா...!" 

விளக்கை ஏற்றிய மருத்துவர் அவரிடம், “என்ன நடந்தது?” என்று கேட்டார். அவன் தொண்டையிலிருந்து தப்பிய ஒரே வார்த்தைகள் இவைதான்: சார், நான்…. ஐயா, நான்தான் அவளின் அப்பா...." 

டாக்டர் ஸ்ட்ரெச்சரில் கிடந்த சடலத்தை நோக்கிப் பார்த்தார். நாடித் துடிப்பு இருக்கிறதா என்று பிணத்தை சோதித்த பிறகு, சிராஜுதீனை நோக்கி, “ஜன்னலைத் திறஎன்றார். 

அப்போது சகினாவின் சடலத்தில் சிறு அசைவு தெரிந்தது. உயிரற்றுப்போயிருந்த கைகளால் தனது சல்வாரை அவிழ்த்து கீழே இறக்கினாள்.  

கிழவன் சிராஜுதீன், “அவள் உயிருடன் இருக்கிறாள்...என் மகள் உயிருடன் இருக்கிறாள்...” என்று மகிழ்ச்சியில் அலறினான்.   

மருத்துவர் தலை முதல் கால் வரை வியர்வையில் நனைந்திருந்தார். 

                                                                          ****