மறுபடியும்
நான் இறந்து கொண்டே
இருக்கிறேன்.
உறங்கும் குழந்தைகளின்
உள்ளங்கைகள் விரிவது போல
என் ரத்தக் குழாய்கள்
சோர்ந்து வீழ்ந்து விட்டன.
பழைய கல்லறைகளின் நினைவுகளோ
அழுகிப்போன சதைகளோ
புதை மண்ணின் புழுக்களோ
எதுவும் எதிர்கொண்ட
சவாலை
எதிர்க்க சொல்லி
என்னை நிர்ப்பந்திக்கவில்லை.
கழிந்து போன வருடங்களும்
தோல்வியின் வடுக்களும்
முகச் சுருக்கங்களின் ஆழத்தில்
வேரூன்றி விட்டன.
அவை எல்லாம்
என் கண்களை
களைப்படையச் செய்துவிட்டன.
இருந்தாலும்
நான் இறந்து கொண்டேதான்
இருக்கிறேன்.
ஏனென்றால் நான் வாழ்வதற்கு
ஆசைப்படுகிறேன்.
……………………
Source : Maya Angelou’s “The Lesson”
In Tamil : Saravanan. K