முடிகள் நரைத்து
வயோதிகம் தாக்கி
உறக்கத்தின் கிறக்கத்தில்
உன்னை நீ மறக்கும்போது,
கனப்படுப்பின் கதகதப்பில்
தலையாட்டி சுகம் காணும்போது
இந்தப் புத்தகத்தை கையிலெடு.
அவசரம் ஏதுமின்றி அதைப்படி.
உன் கண்கள் சுமந்த
மென் பார்வையையும்
அது தாங்கிய குழைவையும்
ஆழ்ந்து நினைந்து படி.
கனிவும் கருணையும்
நிரம்பிய உனது தருணங்களை
காதலித்த முகங்கள் எத்தனை
இருந்தாலும்
உண்மையையும் பொய்மையையும் கலந்து
உன்னழகை ஆராதித்த
முகங்கள் எத்தனை இருந்தாலும்
உனக்குள் உலவிய
உன்னத ஆன்மாவை நேசித்ததென்னவோ
இவன் மட்டும்தானே.
துக்கம் சுமக்கும் உன்
முகத்தின்
வெவ்வேறு சாயலை
ஒரே முகமாக நேசித்ததும்
இவன்தானே!
மின்னும் கம்பிகளின் அருகில்
குனிந்த வண்ணம் மேலே
உற்றுப் பார்க்கிறேன்.
துன்பத்தின் சிறுசாயல்
முகத்தில் தெரிய
மலைமுகட்டைத் தாண்டி ஒடி
நட்சத்திரக் கூட்டத்தின் இடையே
சென்று மறைந்த
எனது காதலைப் பற்றித்தான்
நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.
………….
Source: W.B. Yeats’ poem “When you are old”
In Tamil: Saravanan. K