Friday, 24 March 2023

வெறுக்கத் தெரிந்த காதல் (I do not Love you except because I love you) by Pablo Neruda

இப்போது நான் உன்னைக்

காதலிக்கவில்லை.

உன்னை நான் காதலிக்கிறேன்

என்ற காரணத்தைத் தவிர  

அதற்கு வேறு காரணங்கள் இல்லை.

 

உன் காதல் தந்த இனிய நாட்களின்

நினைவுகளை அகற்றி

இப்போது

காதல் இல்லாத வெறுமை

தருகின்ற சுகம் நோக்கி

நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

உனக்காகக் காத்திருப்பதில் இருந்த

இனிமையை வெறுத்து

இப்போது

காத்திருக்காமல் இருப்பதில் இருக்கும்

அமைதியை நோக்கி

ஊர்ந்து கொண்டிருக்கிறேன்.

 

ஒரு காலத்தில்

குளிர்ந்து போயிருந்த என் இதயம் 

இப்போது

தழல் தரும் சுகம் நோக்கி

சென்று கொண்டிருக்கிறது.

 

உன்னை நான் காதலித்திருக்கிறேன்;

அதற்கு காரணம்

உன்னையல்லால் வேறு எவரையும்

நான் காதலித்ததில்லை.

 

இப்போது

உன்னை நான் ஆழமாக வெறுக்கிறேன்;

வெறுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாறிப்போன என் அன்பின்

அளவீடு என்று எதுவும் இல்லை.  

உன்னைப் நேரில் பார்க்காமல் இருக்கிறேன்.

இருந்தும்

கண்மூடிக் கொண்டு காதலிக்கிறேன்.

அவ்வளவுதான்.  

 

ஜனவரியின் வெளிச்சக் கதிர்கள்

என் இதயத்தை கொடூரமாக

அரித்துத் தின்று விடும்.

உண்மையான

என் அமைதியின் திறவுகோலைத்

திருடிக்கொண்டு சென்று விடும்.

 

நம் கதையின் இந்தப் பகுதியில்

இறந்து போவது என்னவோ நான் மட்டும்தான்.

நான் மட்டும்தான்;

காதலுக்காக இறந்து போனவன்;

உன்னைக் காதலித்ததற்காகவே

இறந்து போன ஒருவன்.

 

ஏனென்றால்

அன்பானவளே!

உன்னை நான் காதலித்திருக்கிறேன்.

தீயிலும் குருதியிலும்  

உன்னை நான் உருகி உருகி

காதலித்திருக்கிறேன்.

………………………  


Source: Pablo Neruda’s “I do not Love you except because I love you”

In Tamil: Saravanan. K

No comments:

Post a Comment